இந்தியா- – தென்ஆப்பிரிக்கா 4-–வது 20 ஓவர் போட்டி கடும் பனியால் ரத்து

இந்தியா- – தென்ஆப்பிரிக்கா 4-–வது 20 ஓவர் போட்டி கடும் பனியால் ரத்து



கடுமையான பனியால் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.


இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 3 ஆட்டங்களில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.


இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மாலையில் இருந்தே அங்கு பனிமூட்டம் பரவியதால் திட்டமிட்ட நேரத்தில் போட்டியை தொடங்க முடியவில்லை. போக போக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அடர்த்தியான பனிமூட்டத்தால் அருகில் இருப்பவர்களை கூட தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனால் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத நடுவர்கள் நிலைமை சீரானதும் ஆட்டத்தை தொடங்கலாம் என்ற நோக்கில் அரைமணி நேரம் வீதம் தள்ளிவைத்துக் கொண்டே இருந்தனர்.


கடைசியாக இரவு 9.30 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள், விளையாடுவதற்கு உகந்த சூழல் இல்லை என்று கூறி ஆட்டத்தை ரத்து செய்தனர். இதனால் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். ‘டாஸ்’ கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டதால் அவர்களுக்குரிய கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.


பொதுவாக டிசம்பர் மாதம் வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவால் குளிர்வாட்டி வதைக்கும்.


இந்த காலக்கட்டத்தில் வடமாநிலங்களில் இரவு நேரத்தில் போட்டியை நடத்துவது சிரமம் என்று தெரிந்தும் கிரிக்கெட் வாரியம் எப்படி லக்னோவை தேர்வு செய்தது என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளனர்.


தொடரில் இந்தியா 2–-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது.




Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%