ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர்

ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர்


ஆசியாவிலேயே மிகப் பெரிய கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புலியகுளம் முந்தி விநாயகர் :


விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என அர்த்தம் கொள்ளப்படும். ‘வி’ என்றால் மேலான என்றும் நாயகர் என்றால் தலைவர் என்றும், அதாவது தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும், ‘ஐங்கரன்’ என்றால் தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்களை உடையவர் என்றும் அர்த்தம் கொள்ளப்படும்.‘கணபதி’ என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே அடங்கியுள்ளது. 


இதுகுறித்து புலியகுளம் முந்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள், பூசாரிகள் கூறியதாவது : புலியகுளம் பகுதியை மையப்படுத்தி அமைந்துள்ள இந்தக் கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கோயிலின் வளாகத்தில் அரச மரத்தடியில், ஆதி மூல விநாயகர் சிலை உள்ளது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதைத் தொடர்ந்து, மக்கள் மனதில் என்றும் இருக்கும் வகையில் பெரிய விநாயகர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஒரே கல்லினால், பிரமாண்டமாக விநாயகர் சிலையை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டு, பிரத்யேகக் கல் தேர்வு செய்யப்பட்டது. ​அதில் பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், அந்தக் கல் புலியகுளத்துக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கோயில் உள்ள இந்த இடத்தில் வைத்து, சிலையை முழுமையாக வடிவமைக்கும் பணிகள் கடந்த 1990-களின் இறுதியில் மேற்கொள்ளப்பட்டது. சில ஆண்டு பணிகளுக்கு பின்னர், 190 டன் எடை அளவில், 19 அடி உயரத்தில் பிரமாண்டமாக முந்தி விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது.

கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த ஆலயம், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  

 ஆசியாவிலேயே, ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப் பெரிய விநாயகர் சிலை என்ற பெருமையை புலியகுளம் முந்தி விநாயகர் கோயில் சிலை பெற்றுள்ளது.

முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். 

விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!

வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை'' என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள்.  

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.


 தினமும் ஏராளமான மக்கள் வந்து, விநாயகரை தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக, விழா நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர். 

ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!



சிவ.முத்து லட்சுமணன்

போச்சம்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%