அரசு திட்ட பயனாளிகளை கட்டாயப்படுத்தி திமுகவில் உறுப்பினர் சேர்க்கை: பழனிசாமி குற்றச்சாட்டு
திருவாரூர்:
திமுக அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபடும் கட்சியினர், 100 நாள் வேலை திட்டப்பயனாளிகள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளை கட்டாயப்படுத்தி கட்சியில் சேர்த்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே பேசியதாவது: மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு திட்ட அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்களும் மக்களவையில் இதுகுறித்துப் பேசாமல் மக்களவைக்கு சென்று பெஞ்சை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் எடுத்துச் சொல்லி, மேகேதாட்டுவுக்குப் பதிலாக ராசி மணலில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த சொல்லலாம். ஆனால், அதையெல்லாம் திமுக அரசு செய்யவில்லை.
ஓரணியில் தமிழ்நாடு என்று கூறி திமுகவினர் வீடுவீடாகச் சென்று கதவைத் தட்டி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர். இதற்காக, 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், முதியோர் உதவித் தொகை பெறுபவர்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களிடம் கட்டாயப்படுத்தி உறுப்பினர் சேர்க்கை மேற் கொண்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டு நடைபெற வுள்ள தேர்வுக்கு (தேர்தலுக்கு) நான் தற்போதே படித்து வருவதாக எனது இந்தப் பிரச்சார பயணம் குறித்து திருமாவளவன் விமர்சித்துள்ளதோடு, அவர் அன்றைய தினமே படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இதுபோன்று கூறுவதன் மூலம்மாணவர்களை அவர் தவறாக வழி நடத்த வேண்டாம். மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து வருகின்றனர். அதைப்போல, நான் மக்களை சந்திப்பது தவறு அல்ல. மக்களை சந்தித்தால் தான் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர்களது பிரச்சினைகளை அறிந்து செயலாற்ற முடியும். தமிழகத்தில் போதைக் கலாச்சாரம் அதிகரித்து வந்ததை நான் 3 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தேன்.
தற்போது இந்த போதைப் பொருட்கள் நடமாட்டம் காரணமாக சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மணல் கொள்ளையை தட்டிக்கேட்பவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சி வந்தவுடன், தவறு செய்கின்ற அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.