பெங்களூரின் பனி அடர்ந்த ஒரு இரவு. குளிருக்கு இதமாக பிளாஸ்கில் இருந்து கொஞ்சம் வென்னீரை எடுத்துக் குடித்தார் சுனந்தா. தூக்கம் வரவில்லை. பாவம் எப்படி வரும்? நிழல் போல கூடவே இருந்த கணவர் சிவராமன் காலமாகி ஒரு மாதமே ஆகியிருந்தது. அவர் இல்லாத வெறுமை மிகவும் கனத்து கிடந்தது. பிபி சுகர் தைராய்டு இன்று பல பிரச்சனைகள் மாமிக்கு. மனைவியை அன்போடும் அக்கறையோடும் பார்த்துக் கொண்டிருந்த அவரது இழப்பில் நிலைகுலைந்து போய்விட்டாள்.
70 வயதை நெருங்கி விட்ட மாமிக்கு மூன்று பெண்கள் ஒரு பிள்ளை . இரண்டு பெண்களும் பிள்ளையும் வெளியூரில் இருக்க, மூத்தவள் வைஷ்ணவி, அத்தை பிள்ளை ரகு ராமனை கல்யாணம் முடித்து உள்ளூர்லயே இருக்கிறாள்.
அவ்வப்போது சிறு மனத்தாபங்கள் இருந்தாலும் பெண்ணும் மாப்பிள்ளையும் சிவராமன் தம்பதியை நன்றாகவே பார்த்துக் கொண்டார்கள். அவருக்கு பெண்களைப் பற்றி கவலைப்பட எதுவுமில்லை. பிள்ளை பாலாஜி தான் அவர் கவலை. வேற்று ஜாதிப் பெண்ணை விரும்பி, பதிவுத் திருமணம் செய்து கொண்டு அவன் வந்து நின்ற போது குடும்பம் ஆடிப் போய்விட்டது. ஆச்சாரத்தில் ஊறிய அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மனஸ்தாபங்கள், சண்டைகள் பெரிதாக, பிள்ளை வேறு வழியின்றி ஒதுங்கிக் கொண்டான். அப்பா என்றால் அவனுக்கு எப்பவும் பயம்தான். அம்மாவுக்கு மட்டும் அடிக்கடி போன் செய்து பேசுவான். கடைசி காலங்களில் அவர் படுத்த படுக்கையாய் இருந்தபோது, பிள்ளை நினைவு வாட்டி வதைத்தது. பாலாஜி தன் மனைவி இந்துவையும் அழகான மகளையும் கூட்டி வந்தபோது.... கண்டு ஆனந்தப்பட முடியாமல் அவருக்கு நினைவு தப்பியிருந்தது.
மறுநாள் அவர் காலம் முடிந்தது. இதோ பொழுது விடிந்தால் 27ஆம் நாள் காரியம். பிள்ளை குடும்பத்தோடு வந்திருந்தான். அம்மாவை தன்னோடு வருமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
ஒரு தூக்க மாத்திரையை போட்டுக் கொள்ளலாம் என்று எழுந்த போது கை தவறி, சிவராமன் சாப்பிட்ட மாத்திரைகள் எல்லாம் மேஜை மேலே கொட்டியது. பிரமை பிடித்தாற் போல் அதையே பார்த்துக் கொண்டிருக்க...
ரூமில் லைட் எரிவதை பார்த்து பெண்ணும் மாப்பிள்ளையும் சுநந்தா பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.
" என்னமா இன்னும் தூங்காம உட்கார்ந்திருக்க "..
" என்னமோ யோஜன தூக்கம் வரல.. " சுநந்தா ஏதோ சொல்ல வந்து தயங்கி நிறுத்தினார் ..
" மாமி எதோ சொல்ல வரா போல் இருக்கு சொல்லுங்க" என்றார் மாப்பிள்ளை .
" ஒன்னும் இல்லப்பா இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு பாலாஜி இங்க இருப்பான். அதுக்கப்புறம் என்ன கொஞ்ச நாள்அங்கே வந்து இருக்கச் சொல்றான்... "
" நீ என்ன பண்ணப் போற? போகப் போறியா இத்தனை நாளா உன் பிள்ளை கண்ணுக்கு உன்னைத் தெரியலையா? " என்று அழுகையும் ஆத்திரமும் சேர வெடித்தாள் வைஷ்ணவி.
" இரு கோபப்படாத... இத்தனை நாளா நாங்க உங்க கூட தான் இருந்தோம்... உனக்கு, உன் தங்கைகளுக்கு, புகுந்த வீட்ல மனுஷா நிறைய... என் பேத்திகள் எல்லாம் பாட்டி, தாத்தா, அத்தை, சித்தி கசின்ஸ் என்று ஒத்துமையா சந்தோஷமா இருக்கு...
ஆனா பாலாஜிய பாரு.... அவனுக்கு மாமியார் வீட்டுலையும் ஆதரவு இல்ல.. மனுஷா இல்ல..... ஒரு அவசரம் ஆபத்துக்கு கூட ஒத்தாசைக்கு ஆள் இல்லாமல் அவ கஷ்ட படறா.. அந்த குழந்தை வருணா, மனுஷாளுக்கு ஏங்கிக் கிடக்கு ..இன்னும் கொஞ்ச நாளில் பெரியவளாயிடும். ரெண்டு பேரும் வேலைக்கு போறா...
ரெண்டுங்கிட்டான்வயசுபொண்ணு... என்ன இருந்தாலும்...அது என் ரத்தம்..நான் பார்த்துக்க வேண்டாமோ? அப்பா மாதிரி நான் வீம்பு காட்ட முடியாது.. கொஞ்ச நாள் நானு இருந்துட்டு வரேன் " என்றார் உறுதியாக.
வருத்தம் இருந்தாலும் அம்மாவை பற்றி பெருமையாக இருந்தது வைஷ்ணவிக்கு.அம்மாவை தோளோடு அணைத்து படுக்கையில் ஒண்டிக் கொண்டாள்... விடிய கொஞ்சம் நேரமே இருக்கிறது..பாலாஜிக்கும்!
.