அந்தரங்க வீடியோக்கள் அழிக்க அழிக்க மீண்டும் உலா வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

அந்தரங்க வீடியோக்கள் அழிக்க அழிக்க மீண்டும் உலா வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

சென்னை:

‘ராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் அழிக்க அழிக்க மீண்டும், மீண்டும் இணையத்தில் உலா வருகின்றன’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.


இணையத்தில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோக்களை அகற்றக் கோரி பெண் வழக்கறிஞர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், “பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது மேலும் 13 இணையதளங்களில் பரப்பப்பட்டுள்ளன. அவற்றையும் நீக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.


அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, “இதுபோன்ற சைபர் தாக்குதலுக்குள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடர்பாக எளிதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது. எனவே இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” எனக் கோரினார்.


அதையடுத்து நீதிபதி, “ராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்ட, வெட்ட முளைப்பதுபோல பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் அழிக்க, அழிக்க மீண்டும் மீண்டும் இணையத்தில் உலா வருவது வேதனை தருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவில் உள்ள 1,400 சட்ட விரோத இணையதளங்கள் முடக்கப் பட்டது போல இந்த ஆபாச இணைய தளங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஆக.19-க்கு தள்ளி வைத்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%