அதிகாரம் கிடைத்தால், ரெய்டு நடத்தாதவரே சிறந்த தலைவர்..! • அண்ணாமலை சொல்கிறார்
Jul 12 2025
10

சென்னை, ஜூலை 13-
அதிகாரத்துக்கு வந்த பிறகு ரெய்டு அனுப்புவர் தலைவரே அல்ல என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை உத்தண்டியில் இந்து பவுண்டேசன் அமைப்பு சார்பில் அரசியல் பயிலரங்கம் நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது-
இன்று வருவோர் போவோர் எல்லாம் தலைவர் ஆகிவிடுகின்றனர். கையில் மைக்கை பிடித்துக் கொண்டு, வெள்ளைச் சட்டை போட்டு 4 ரீல்ஸ் போட்டால் தலைவன் ஆகிவிடுகிறார்கள். இதே தமிழகத்தில் தான் காமராஜர், கக்கன் போன்றவர்கள் தலைவர்களாக இருந்தனர்.
உண்மையில் ஒரு நல்ல அரசியல் தலைவராக வர 2 தகுதிகள் முக்கியம். முதலில் சமூகத்தின் மீது உங்களுக்கு ஒரு பார்வை இருக்க வேண்டும். நீங்கள் மனிதநேயம் மிக்கவராக இருக்க வேண்டும். சாதி, மதம், சித்தாந்தத்தைக் கடந்து வெளியில் வர வேண்டும். அதன் பிறகே மக்கள் உங்களை அரசியல் தலைவராக ஏற்பார்கள். மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றத்தை முதலில் நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். உண்மையில் நீங்கள் அமரும் சீட் உங்கள் அதிகாரத்தைத் தீர்மானிக்காது. உங்கள் செயல்பாடே தீர்மானிக்கும்.
எப்போதும் பதவியை எதிர்பார்க்காமல் கட்சியில் சேர வேண்டும்.. பதவி வரும் போகும்.. எந்தப் பதவியாக இருந்தாலும் ஒருநாள் இல்லாமல் போகும்.. அதுதான் இயல்பு. தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டே இருங்கள்.. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவிகள் தானாகவே வந்து சேரும். அதிகாரத்திற்கு வந்தபிறகே தன்னை அவமதித்தவர்களைக் கூட பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் யார் இருக்கிறாரோ அவரே சிறந்த தலைவராக வருவார் என்று மோடி கூறியுள்ளார். ஒரு முறை பழிவாங்கத் தொடங்கினால் அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிகாரத்திற்கு வந்த பிறகு அவமதித்தவர்களின் செல்போனை ஒட்டுக்கேட்பது, பழிவாங்குவது, ரெய்டு அனுப்புவது ஆகியவற்றைச் செய்யவே கூடாது. ஒரு அரசியல்வாதிக்குப் பழிவாங்கும் போக்கு இருக்கலாம்.. ஆனால், ஒரு தலைவனுக்கு அது இருக்கவே கூடாது.
"தமிழகத்தில் 40 சதவீத மக்கள் வாக்குப்பதிவுக்கு ஒரு வாரம் இருக்கும்போது தான் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதையே தேர்வு செய்கிறார்கள். அரசியல் சித்தாந்தத்தைப் பார்த்து வாக்களிக்கும் நிலை எல்லாம் மாறிவிட்டது. எனவே, கட்சி அலுவலகங்களில் மட்டும் இருந்துவிடாமல் மக்களிடம் சென்று பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?