"ஒரு உருண்டை சாதம்"

"ஒரு உருண்டை சாதம்"



பக்கவாதம் வந்து கட்டிலில் கிடந்தார் சோமு. காலம் முழுக்க சுமந்த நினைவுகள் அசைய முடியாதபடி அவரை கட்டிப் போட்டிருந்தது.


தினமும் மகள் ராதா உணவு கொண்டு வருவாள். ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார். 


“நீ ஏன் கொண்டு வர்றே... போய் அம்மாவைக் கொண்டு வரச் சொல்லு”

கத்துவார்.


ராதா முகம் வாடித் திரும்பிச் செல்லுவாள்.


வீட்டிலே எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். "கிழத்துக்கு லொள்ளு பாரு... இத்தனை வயசாகியும் பொண்டாட்டி கைல தான் சாப்பிடுமாம்.”


நக்கல், நையாண்டி, எள்ளல், ஏகடியம் எல்லாம் அளவுக்கதிகமாகிப் போய் விட ஒரு நாள் மனைவி ஜோதியே பொறுமை இழந்து கேட்டு விட்டாள்.


“இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

பொண்ணு மனசு எவ்வளவு வலிக்கும் தெரியுமா?... எல்லோரும் கேவலமாய்ப் பேசுறாங்க…”


சோமு பதில் சொல்லவில்லை.

ஆனால் கண்கள் மட்டும் ஈரமாயின.


உதடுகள் தழுதழுக்க மெல்லப் பேச ஆரம்பித்தார். "நம்ம பொண்ணு ராதாவோட வலது கை… கோணல் கை... அது எப்படி ஆச்சுனு தெரியுமா?”


ஜோதி கூர்ந்து கவனிக்க, "அவ சின்ன வயசுல ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அடம் பிடிச்சா....நான்… நான் விட்ட ஒரு அறைல அவ தெறிச்சுப் போய் விழுந்தா.”


அவர் குரல் உடைந்தது.


 " அப்ப அவ மணிக்கட்டு ஒடைஞ்சு போச்சு... சரியான வைத்தியம் பாக்காம… வெறும் எண்ணைக் கட்டு... மட்டும் போட்டதுல நிரந்தரக் கோணலாயிடுச்சு.”


சோமு கண்கள் வழியாக கண்ணீர் ஓடியது.


“அந்த கையால அவ உணவு குடுக்கும் போதெல்லாம்…என் மனசு சாப்பிட மறுக்குது ஜோதி... மனசு வலிக்குது ஜோதி"


கதவருகே நின்றிருந்த ராதா

எல்லாம் கேட்டு விட்டு மெல்ல வந்தாள். தட்டைக் கையிலெடுத்தாள்.


அதே கோணல் கையால் ஒரு உருண்டை செய்து, அப்பாவின் வாயருகே கொண்டு போனாள்.


“இது உங்களுக்கான என் அன்பு அப்பா”என்றாள்.


சோமு முதல் முறையாக

மகள் கைலிருந்து

உணவை வாங்கிக் கொண்டார்.



(முற்றும்)

முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%