news Breaking News
clock

ஸ்ரீரங்கம் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்


திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.


திருச்சியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார். இதனைத்தொடர்ந்து இன்று காலை திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.


அதன் பின்னர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் மரியாதை அளித்தனர். இதனைத்தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற ஜெய்சங்கர் ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்தார். இதையடுத்து ராஜகோபுரம் பின்புறம் தெரியும் இடத்தில் நின்று தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்த அவர், மூலவர் பெருமாளை தரிசனம் செய்தார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து, 10வது நாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் உற்சவர் நம் பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அங்கு அமைச்சர் ஜெய்சங்கர் சென்று சாமி தரிசனம் செய்த பின் தாயார் சன்னதிக்கு சென்று ஸ்ரீரங்க நாச்சியாரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கம்பர் மண்டபத்தை பார்வையிட்டார்.


வைகுண்ட ஏகாதசி திருவிழாவை யொட்டி அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இன்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News