ஸ்ரீரங்கத்தில் 5-ந்தேதி "மோடி பொங்கல்" மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்
Jan 04 2026
20
திருச்சி, ஜன
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற 5-ந்தேதி 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசார பயணங்களை முன்னெடுத்துள்ளது.
கூட்டணி, தொகுதி பங்கீடு, மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என்று அரசியல் கட்சிகள் தங்களை பரபரப்பு வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தநிலையில், அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தித்திக்கும் பொங்கலுடன் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 2 மாதங்களுக்கு தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கவும் பா.ஜ.க. வியூகங்கள் அமைத்து வருகிறது. அந்த வகையில் வருகிற 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் ‘மோடி பொங்கல்' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனவரி 4-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டைக்கு வர உள்ளார். அன்றைய தினம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற யாத்திரையின் நிறைவு விழா நடக்கிறது. இந்த விழாவில் அவர் பங்கேற்று பேசுகிறார்.
இதில், சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதையடுத்து, திருச்சியில் அமித்ஷா தங்குகிறார். பின்னர், மறுநாள் (5-ந்தேதி) திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். இதையடுத்து காலை 11 மணி அளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் ஏறக்குறைய 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் "மோடி பொங்கல்" விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள், மேலிட பொறுப்பாளர்களும் பங்கேற் கிறார்கள். தொடர்ந்து, அடுத்தடுத்து தேசிய தலைவர்கள் தமிழகம் வர இருக்கின்றனர். பிரதமர் மோடியும் வர உள்ளார். பொங்கலுக்கு பிறகு இந்த பயணங்கள் அனைத்தும் வேகமெடுக்கும். அதேபோல், பொங்கலுக்கு பிறகு கூட்டணிகள் இறுதி வடிவம் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?