வரலாறு:
வையப்பமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், வையப்பமலை என்னும் ஊரில் மலை மீது அமைந்துள்ள முருகன் குன்றுதோறாடல் கோயிலாகும்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு குன்று உடன் கூடிய பகுதிதான் வையப்பமலை. மலையின் பெயரே ஊருக்கும் அமைந்திருக்கிறது.
இங்குதான் அழகிய திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார் முருகப்பெருமான். படிகளில் ஏறும் முன் கீழே சன்னதி கொண்டுள்ள விநாயகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும். படிகளில் ஏறும் வழியில் சப்தகன்னியர் சன்னிதி அதனருகே உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் கருப்பண்ணசுவாமி, கொடிமரம் ஆகிய அமைப்புடன் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.
மேலே கோயிலுக்குச் சென்றவுடன் சிவாலய காவலராக விளங்கும் வயிரவ மூர்த்தி, ஆதித்யாதி நவக்கிரகங்களின் தனிச்சன்னிதி தவிர மார்க்கண்டேயனின் உயிர்காக்க காலசம்ஹாரனாக வெளிப்பட்ட சிவபிரான் அமிர்தகடேஸ்வரர் என்கிற திருநாமத்துடன் லிங்கத் திருமேனியாகத் தரிசனம் அளிக்கிறார்.
இங்கு அம்பிகை அபிராமி வள்ளியாகச் சன்னதி கொண்டிருக்கிறார். இத்தனை சன்னதிகளையும் உடல் கொண்ட கோயிலின் மூலவராக விளங்குகிறார் ஸ்ரீ சுப்பிரமணியர். முருகனுக்கான விசேஷமாகச் சொல்லப்படும் 16 கோலங்களில் இந்த சுப்பிரமணியர் திருக்கோலமும் ஒன்று.
மூலவர்: சுப்ரமணிய சுவாமி
உற்சவர் : வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர்
புராண பெயர்: வைகை பொன்மலை
ஊர்: வையப்பமலை
மாவட்டம்: நாமக்கல்
அமைத்தவர்: ராமச்சந்திர நாயக்கர்
காலம்: 11 ம் நூற்றாண்டு
தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவில் வையப்பமலை எனப்படும் வைகைபொன்மலை அமைந்துள்ளது.
இதற்கு மூன்றுகல்தொலைவில் "அலவாய்மலை"என்று அழைக்கப்படும் உலைவாய்மலை அமைந்துள்ளது.இந்த உலைவாய் மலையின் ஒரு பகுதியான சித்தர்மலையிலே சித்தர்கள் பலர் தங்கியிருந்து மூலிகைகள் பல கொண்டு ரச வாதத்தின் மூலம் பொன் செய்தார்கள். இவ்வாறு பல காலம் செய்த பொன்னை எல்லாம் அவர்கள் ஒன்று திரட்ட அது ஒரு பொற் குன்றாக விளங்கியது.
பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி சித்தர்களின் மதி எல்லாம் பொன்னின் பால் சென்றதால் அவர்களை தடுத்தாட்கொண்டு திருவிளையாடல் புரிய விரும்பினார்.
முருகப்பெருமான் அந்த சித்தர்களிடம், ஆடு மேய்க்கும் இடையனை போன்றவடிவத்தில் அவர்களிடம் சீடனாகசேர்ந்து, அவர்கள் அயர்ந்த சமயத்தில் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கலானார்.
அதைக் கண்ட சித்தர்கள் அவன் யார் என்று தெரியாமலேயே, "வை பொன்னை" "வை பொன்னை" என கூவிக்கொண்டே துரத்தினர். "நீ தூக்கிச் செல்லும் பொன்மலை உனக்கு உதவாமல் கல் மலையாக போகக்கடவது" என்று சித்தர்கள் சாபம் தந்தனர். அதனால் இந்தபொன்மலை, கலியுகத்தில் கல் மலையாக மாறியதாக செவிவழி தகவல் கூறுகிறது.
தற்போது உள்ள இவ்விடத்திற்கு வந்ததும் அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஔவையார் முருகனைக் கண்டு அடையாளம் கண்டுகொண்டு,"வையப்பா, கைப்பொன் மலையை" என்று வேண்டினார். அதற்குச் இசைந்த வடிவேலன், இவ்விடத்தே பொற்குன்றை வைத்து விட்டு ஔவைக்கும் துரத்தி வந்த சித்தர்களுக்கும் மலைமீது காட்சி அளித்து உபதேசம் செய்து அருளினார். அதுமுதல் வைகைப்பொன்மலை என்றும் பேச்சுவழக்கில் வையப்பமலை என்றும் அழைக்கப்பட்டுவருகிறது.
பழனி மூலவர் பீடத்தில் மூலவர் இல்லாததைக் கண்ட போகர் தனது ஞான திருஷ்டியின் மூலமாக நடந்ததை அறிந்து நவ பாசனத்தால் மூலவர் சிலையை உருவாக்கி பீடத்தில் வைத்து விட்டார்.
அதுமுதல் பழனியில் நவபாஷான முருகனும் வைகைபொன்மலையில் மூலவரான பாலதண்டாயுதபாணி யானமுருகனும் மேற்கு நோக்கி அருள்புரிந்து வருகிறார்கள்.
ஒருமுறை நாரதர் செய்த ஒரு யாகத்தில் தவறான மந்திர உச்சாடனம் செய்ததின் பயனாக ஒரு மிகப்பெரியசெம்மறி ஆட்டுக்கடா தோன்றியது.அது ஈரேழு உலகங்களிலும் சுற்றிவந்து மிகப் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தது. அதை அடக்கி தங்களை காக்குமாறு தேவர்கள் முருகப் பெருமானிடம் முறையிட இறைவனும் அதை அடக்க முயலுகையில், அது சிக்காமல் சுற்றித்திரிந்து இந்த தலத்திற்கு வருகையிலே, இறைவன் அதை தன் கால்களால் நெறிக்க, அது களைத்து அடங்கி நின்றது. அது இறைவனிடம், "இறைவா, தாங்கள் எப்போதும் இந்தப் பொன்குன்றிலே வைகி,அடியார் குறை தீர்க்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டது.
இந்த வரலாறு"கொங்குவேளாளர் புராணவரலாறு"என்ற நூலிலும், கந்தபுராணத்திலும்,கல்லாடம் என்ற பழைய நூலிலும்,
"நாரதன் ஓம்பிய செந்தீக்கொடுத்த திருகுபுரி கோட்டுத் தகர்வரு மதியோய்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கட்கிடாயதனை சென்றுகொணர்ந்து எங்கோன்" (கந்தர் கலிவெண்பாவில் 89வது கண்ணி) குறிப்பிடுகிறது.
மேலும் அலைவாய் மலைக்கும் பழனி மலைக்கும் வைகைபொன்மலை க்கும் உள்ள தொடர்பை,
"கொல்லியும் வைகை அலைவாய் பழனி பொற்கொங்கணவர் வில்லியும் ஓதி வராகம் தலைமலை வெண்ணைமலை அல்லியை சென்னிகிரி கஞ்சம் வெள்ளி அரவகிரி வல்லியும் வாளை மலை சூழ்வது கொங்கு மண்டலமே"
என்று கார்மேக கவிஞரின் "கொங்கு மண்டல சதகம்" கூறுகிறது.
இந்த மலைப்பகுதியில் வளர்ந்திருக்கும் காட்டுப் பூக்களில் இருந்து கிடைக்கும் தேனைப் பருகி அதை திருச்செங்கோடு மலை இடுக்குகளில் தேனீக்கள் அடை சமைத்தன என்று "திருச்செங்கோடு திருப்பணி மாலை" என்னும் நூல் கூறுகிறது.
பழனி திருத்தலத்திற்கு சண்முகநதி தீர்த்தமாக விளங்குவது போல வைகை பொன்மலைக்கு திருமணிமுத்தாறு விளங்குகிறது.
உருவஅமைப்பில் பழநியை ஒத்திருப்பதாலும், பழனங்கள்(வயல்கள்)சூழ்ந்து இருப்பதாலும் இத்தலம் "சிறுபழநி" என்றும் அழைக்கப்படுகிறது.
கொங்கண சித்தர் இம்மலையில் மூலவரை ஒரு சிலா ரூபத்தில் இருத்தி பூஜை செய்து வந்துள்ளார். அவர் பூஜித்த சிலாரூபம் இன்றும் உள்ளது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாக குகையில் அவர் பூஜித்து வந்த முருகனின் திரு உருவம் அங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்து மலைப்பாதை வழியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த திருவுருவம் தற்போது குழந்தை வேலாயுதசாமி என வணங்கப்பட்டு வருகிறது.
அவர் தங்கி தவமிருந்தகுகையும் மலை அடிவாரத்தில்உள்ளது.மலைமீது பிற்கால சித்தர் ஒருவருடைய ஜீவசமாதி இருந்ததாகவும் தெரிகிறது.
1926 ல் இந்த கோயிலுக்கு வேங்கை மரத்தால் செய்யப்பட்ட தேர் உருவாக்கப்பட்டு இன்றும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடந்து வருகிறது.
இம்மலை மீதிருந்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்ற திருச்செங்கோடு, சங்ககிரிமலை, நைனாமலை, அலவாய்மலை,கொல்லிமலை ஆகியவற்றை தரிசிக்கலாம்.
முருகப்பெருமான் பழனியை விட்டு இந்த இடத்திற்கு இடம் பெயர்ந்து வந்தது நக்கீர முனிவரின் திருமுருகாற்றுப்படையில் 176 ம் செய்யுளில், "தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்ற கூற்றின் மூலம் உறுதிப்படுத்துகிறார்.
புராணகாலத்தில் ஒரு முறை அனுமன் சாலகிராம கல்லை எடுத்துக் கொண்டு நாமக்கல் செல்லும் வழியில் இத்தலத்திற்கு வரும்போது அந்தி மயங்கும் நேரம் ஆகவே, மலைமீதுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நீராடி சந்தியாவந்தனம் செய்ய விரும்பினார். அப்போது முருகப்பெருமான் சாளக்கிராமம் வைக்கப்பட வேண்டிய இடம் இது அல்ல என்று உணர்ந்ததால், சுமார் 15 கல் தொலைவில் உள்ள கமலாலயக் குளக்கரையை அனுமனுக்கு காட்டி அருள் புரிந்தார். எனவே அங்கு நீராடும் எண்ணத்தை விட்டு முருகனிடம் விடை பெற்றுக் கொண்டு அவசரமாக நாமக்கல் நோக்கி சென்றடைந்தார்.
அனுமனை முருகன் சந்தித்த கோவை அனுவாவியை அடுத்து இரண்டாவது தலமாக இது குறிப்பிடப்படுகிறது.
தற்போது இந்த பிரம்மதீர்த்தம் தெப்பக்குளம்என்று அழைக்கப்படுகிறது. அடிவாரத்திலுள்ள சரவண தீர்த்தம் பூலாம்பாழி என்றும் அழைக்கப்படுகிறது. மலைமீது வள்ளி சுனையும்,தெற்கு பகுதியில் மனிதர்கள் ஏறிச் சென்று பார்க்கமுடியாத இடத்தில் ஒரு குகையும் உள்ளது. இந்த குகையை கிரிவலப் பாதையில் நின்று நன்றாக பார்க்க முடிகிறது.தலவிருட்சமாக விராலி செடி உள்ளது.
இக்கோயில் 16 ம்நூற்றாண்டைச் சேர்ந்தது.நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் சுண்ணாம்பு,கடுக்காய், முட்டை,வெல்லம் கொண்ட கலவையால் கட்டப்பட்டதாகும். மேலும் பிரம்ம தீர்த்த குளத்தின் அருகே பழமையான பத்தர் மண்டபமும் உள்ளது. இத்திருத்தலத்தை பாடிய கவிஞர்கள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்,சுத்தானந்த பாரதி, குன்றக்குடி அடிகளார், சுப்பிரமணியக் கவிராயர்,முருகொளி வைத்தியலிங்கம் ஆவர்.அருணகிரிநாதர் இந்த தலத்து இறைவனை பற்றிபாடிய பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.கொங்கண சித்தர் தவம் புரிந்த குகைக்கு அருகிலேயே பழங்காலமாக என்றும் அழியாத தேன்கூடு உள்ளது.
வைகைபொன்மலை மகத்துவ பாசுரம்,முருகொளி,வையப்பமலை குமாரர்மேல் தாய்-மகள் ஏசல், சுப்பிரமணியர் பாடல் ஆகிய நூல்கள் உள்ளன.
கோயில் அமைப்பு :
மிகப் பழமையான புராணகால கோயிலாக சிறியதாக இருந்ததை 16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் செப்பனிடப்பட்டு கட்டப்பட்டது. பிற்காலத்தில் இத்திருக்கோவிலில் திருப்பணி செய்தவர்களைபற்றி "முரு கொளி" என்ற நூலில் காணலாம். பழங்கால மூலவர்சிலை சிதைந்து விட்டபடியால் புதிய திருமேனி அமைத்து பெப்ரவரி 5 2014 அன்று கோவில் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
குமாரதந்திரம் மற்றும் ஸ்ரீ தத்துவ நிதி ஆகிய நூல்கள் பெருமானின் இந்த திருக்கோலத்தை மிகச் சிறப்பானதாகக் குறிப்பிடுகின்றன. மூலஸ்தானத்தில் இரண்டு கரத்தினராக இடையில் கையை ஊன்றியவராகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர்.
மங்கலங்கள் பெருகுதல், அறிவு, சாதுரியம், வெற்றி இவற்றைச் சுப்பிரமணியராக விளங்கும் முருகப்பெருமானை வழிபடுவதால் அவை அனைத்தும் நமக்கும் கிடைக்கின்றன என்கின்றன தத்துவங்கள்.
Balachandar