வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது: கேரள முதல்-மந்திரி கண்டனம்
திருவனந்தபுரம்,
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
இதற்கு, ரஷியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது. சீனா, ஜப்பான் நாடுகளும், ஐ.நா. அமைப்பும் கூட வெனிசுலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளன.
இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று கூறும்போது, அமெரிக்க அரசு ஏகாதிபத்திய ஆணவத்துடன் நடந்து கொள்கிறது. வெனிசுலாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டு, அதன் தலைவரை சிறைபிடித்து வைத்துள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.
அமெரிக்க ராணுவ நடவடிக்கையானது, பிற நாடுகளில் அத்துமீறி தலையிடும் அதன் நீண்டகால வரலாற்றை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் நலனிற்காக, அவற்றை பாதுகாப்பதற்காக, மோதல்களை உருவாக்கி, லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கடந்த காலங்களில் கொன்று குவித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த நிலையில் பண மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய நீதிபதி யஷ்வந்த் மறுத்துவிட்டார்.
இதையடுத்து மக்களவையில் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு 3 உறுப்பினர் கொண்ட விசாரணை குழுவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்தார். இதே தீர்மானம் மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா மனுத் தாக்கல் செய்தார். அதில் விசாரணைக்கு குழு அமைத்தது அரசியல் சாசனம் மற்றும் நீதிபதிகள் விசாரணை சட்டத்துக்கு எதிரானது என கூறி சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்யும்படி நீதிபதி வர்மா கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் எஸ்சி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சித்தார்த் லுத்ரா ஆஜராயினர். மத்திய அரசின் சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.