ராமேஸ்வரம் கோயில் உண்டியல் பணம் திருட்டு: கைவரிசை காட்டிய தூய்மைப் பணியாளருக்கு வலை
உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது பணத்தைத் திருடிய தூய்மைப் பணியாளரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ராமநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் கடந்த ஒரு மாத காலமாகப் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் உண்டியல்கள் நிறைந்தன. இதையெடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை காலை உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் கல்யாண மண்டபத்தில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 41) என்ற தூய்மைப் பணியாளரும் ஈடுபட்டிருந்தார்.
பணியாளர் தலைமறைவு:
பணம் எண்ணும் பணியின்போது, மணிகண்டன் இரண்டு முறை பணக்கட்டுகளை மறைத்து வெளியே எடுத்துச் சென்றுள்ளார். இதனைத் திரையில் கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர் மூன்றாவது முறை பணத்தை ஆடைக்குள் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றபோது கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், 20,600 ரூபாய் மதிப்பிலான 103 இருநூறு ரூபாய் தாள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்துக் கோயில் கண்காணிப்பாளர் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில், ராமேஸ்வரம் கோயில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், மணிகண்டன் தலைமறைவானதால் அவரது செல்போன் எண்ணைக் கொண்டு போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிடிபட்ட மணிகண்டன், ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பணியாற்றியபோது பணக் கையாடல் புகாரில் சிக்கி, ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் உண்டியல் வசூல் ஆகியுள்ள நிலையில், கோயில் ஊழியரே திருட்டில் ஈடுபட்ட சம்பவம் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?