மாற்றம்.

மாற்றம்.



வசந்தி வாசல் படிக்கட்டில் அமர்ந்து முறத்தில் அரிசியைப் போட்டு கல் எடுத்துக் கொண்டிருந்தாள்.


பக்கத்து வீட்டு மாலா மாமி "ஏண்டி இன்னும் ஒங்காத்துல ஒல வக்கல" என்று கேட்டாள்.


"ஒல வச்சா என்ன? வக்கலன்னா என்ன? வச்சுட்டு வக்கலன்னு சொல்வேன். வைக்காம வச்சேன்னு சொல்வேன். எங்க வீட்டுல என்ன நடந்தா என்ன?" என்று ஒரு ப்ரசங்கமே செய்தாள்.


"எனக்கெதுவும் இல்லமா, கொழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வருவாங்களே, என்னத்தை சாப்பிடுவா?" தெரியாமல் கேட்டுவிட்டாள் மாலதி.


அதற்கும் சாடி சாடி பதில் சொன்னாள். வசந்தியின் பெண்ணும் பிள்ளையும் பள்ளிக்கூடத்திலேந்து வந்து கை கால் அலம்பிட்டு தட்டு எடுத்து வந்து உட்கார்ந்தனர்.


"தெனோமும் சமைக்கணுமா? ஒரு நாள் சமைக்காட்டி என்ன? சாப்பிடாட்டி என்ன" என்று குழந்தைகளை கத்த ஆரம்பித்தாள்.


இரண்டும் அமைதியாக எழுந்து தட்டை கவிழ்த்து விட்டு பையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தனர்.


"சாப்ட்டாச்சா?" என்று மாலா மாமி சாடையில் கேட்க, இல்லை என்று குழந்தைகள் சொல்ல வீட்டிற்கு அழைத்து சாப்பிட வைத்து அனுப்பினாள்.


உள்ளேயிருந்து இதை கவனித்த வசந்தி இந்த வேளைக்கு காரியம் ஆச்சு. இந்த மனுஷன் சாய்ந்தரமானும் கிருஷ்ணாயில் வாங்கிட்டு வருவானா என்பது அந்த கிருஷ்ணனுக்கே வெளிச்சம்!


கணவன் வந்தான். கையில் கிருஷ்ணாயில் இல்லை. இரவு உணவிற்கு என்ன செய்வாள்? மத்தியானம் கூவி கூவிக் கத்தி எப்படியோ குழந்தைகளை சாப்பாட வைத்துவிட்டாள். ராத்திரிக்கு கஞ்சிமாவை வெல்லம், நெய் போட்டு பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை கொடுத்தாள். பிறகு எல்லோரும் தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக் கொண்டனர்.


பொழுது விடிந்தது. பொறுக்கி வைத்திருந்த சுள்ளியில் அடுப்பைப் பற்ற வைத்து எல்லோருக்கும் காபியும் கஞ்சியும் வைத்தாள்.


"இட்லி தோசை சாப்பிட்டாதானா?, கஞ்சி தொண்டைல இறங்காதா? கஞ்சி குடிச்சா தோஷமா?" என்று கத்திக் கொண்டிருந்தாள்.


தோட்டத்தில் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த மாலா மெல்ல இவர்கள் வீட்டை எட்டிப் பார்த்தாள்.  


விஸ்வம் பார்த்து விட்டு வந்தார். "என்ன தான் பிரச்சினை?" மாலா கேட்டதும்

"ஸ்டவ்ல சீமண்ணை தீந்து போச்சு, அதான்.." என்று இழுத்தார்.


"இதுக்குத்தான் இத்தனை அமக்களமா?, எரவல் கேட்டாத் தரப்போறோம். இருந்தாலும் உன் வீட்டுக்காரிக்கு இத்தனை கோவம் ஆகாதுப்பா" என்று சொல்லியவாறு உள்ளே சென்று ஒரு பாட்டிலில் எண்ணெய் கொண்டுவந்து கொடுத்தாள்.


"எங்க வீட்டுல என்ன இருக்கு, என்ன இல்லைனு யாருக்கு தெரியனும்? எண்ணெய் இல்லன்னு சொல்லியாச்சா?" என்று கணவனை கோபித்துக் கொண்டாள்.


பிறகு ஸ்டவ்வில் எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து சமைத்துப் பரிமாறினாள்.


தெருவிலேயே பொதுவாக யாருமே எதுக்குமே வசந்தியிடம் எதுவும் பேச பயப்படுவார்கள்.


வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள தயாரில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


குழந்தைகளுக்குமே இது மன உளைச்சலையும் அமைதியின்மையையும் தந்தது.


பெரியவன் சஞ்சய் எல்லாவற்றிலும் படு சுட்டி. சின்னவள் அனன்யா ரொம்பச் சமத்து. பெற்றவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் நிம்மதியும் தரும் குழந்தைகள் தான். கொஞ்சம் நடுத்தர வர்க்கம்.


அன்று பள்ளியில் மார்க் கார்டு கொடுத்திருந்தார்கள். "அம்மா நா எல்லாத்துலயும் ஃபெயில் மார்க் மா" என்றான்.


"என்னது ஃபெயிலா? இதுக்குத்தான் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறோமா என்று வசந்தி கத்த, "பாஸானா என்ன? ஃபெயிலானா என்ன? பாஸாயிட்டு ஃபெயில்னு சொன்னா என்ன?" என்றவாறு அம்மா பாணியில் புலம்ப ஆரம்பித்தான். முதலில் கோபித்தாலும் வசந்தி மெல்ல சிரித்துக் கொண்டாள்.


அதிலிருந்து தன் இயலாமையை கோபமாக காண்பிப்பதில்லை.    


மருமகள் கேஸ் வரும் என்று வாங்கிவைக்கச் சொன்னபோது நினைவலைகளாய் தோன்றிச் சிந்தித்தவாறு அமர்ந்திருந்த சஞ்சய்க்கு வாழ்க்கை என்பது எப்படியெல்லாம் இருந்துள்ளது என்று வியப்பாக இருந்தது. அம்மா க்ருஷ்ணாயிலுக்கு பட்ட பாடு நினைத்துப் பார்த்துக் கொண்டார்.


வி.பிரபாவதி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%