துபாய், நவ.5-
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஐ.சி.சி. கனவு அணியில் மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகிய இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
13-வது பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் செப்டம்பர் 30-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நவிமும்பையில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்து முதல்முறையாக உலகக் கோப்பையை வசப்படுத்தி சரித்திரம் படைத்தது.
இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகள் அடிப்படையில் உலகக் கோப்பை கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.
இதன்படி, சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்), மிடில் ஆர்டர் பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 292 ரன்), தொடர்நாயகி விருது பெற்ற ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா (215 ரன், 22 விக்கெட்) ஆகிய 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
2-வது இடம் பெற்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனும், இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவருமான (2 சதம், 3 அரைசதம் உள்பட 571 ரன்) லாரா வோல்வார்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அத்துடன் அந்த அணியில் இருந்து ஆல்-ரவுண்டர்கள் மரிஜானே காப் (208 ரன், 12 விக்கெட்), நடினே டி கிளெர்க் (208 ரன், 9 விக்கெட்) ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.
அரைஇறுதியில் தோற்ற ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆல்-ரவுண்டர்கள் ஆஷ்லி கார்ட்னெர் (328 ரன், 7 விக்கெட்), அனபெல் சுதர்லாண்ட் (117 ரன், 17 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர் அலனா கிங்கும் (13 விக்கெட்), அரைஇறுதியில் வீழ்ந்த இங்கிலாந்து அணியில் இருந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் (16 விக்கெட்), ஆல்-ரவுண்டர் நாட் சிவெர் (262 ரன், 9 விக்கெட்) இடம் பெற்றுள்ளனர். அரைஇறுதிக்கு முன்னேறாத பாகிஸ்தான் அணியில் இருந்து விக்கெட் கீப்பர் சித்ரா நவாஸ் (4 கேட்ச், 4 ஸ்டம்பிங், 62 ரன்) மட்டும் தேர்வாகி இருக்கிறார். அதே சமயம் இந்திய அணியை வழிநடத்திய ஹர்மன்பிரீத் கவுருக்கு இந்த கவுரவ அணியில் இடமில்லை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?