பூந்தமல்லி: தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு

பூந்தமல்லி: தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு


பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி, வாகனங்கள் மீது மோதியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஒன்று, இன்று காலை சென்று கொண்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் அழகுராஜா(31), ஓட்டிச் சென்ற அந்த லாரி பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு வாகனத்தின் மீது மோதிவிட்டு வேகமாக சென்றது.


இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்த தேவி( 40) மற்றும் கிருஷ்ணன் (52) ஆகிய இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து, அந்த லாரி, மற்ற இரு சக்கர வாகனங்கள், கார்களை இடித்து தள்ளிவிட்டு சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால், மின் கம்பம் மற்றும் மின்சார கம்பிகள் கீழே சாய்ந்தன. இச்சம்பவத்தில், சாலையில் நடந்து சென்ற, சேலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியான தனபால் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதனை கண்டு அதிர்ச்சியடைந்த, அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர்கள் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்து, மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி லாரி கண்ணாடிகளை கற்களால் உடைத்தனர்.


இதுகுறித்து தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பவ இடம் விரைந்து, தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . கிருஷ்ணன், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


இச்சம்பவம் குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்களில் ஒருவரான தேவி, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணன்(52) என்பவருடன் லிப்ட் கேட்டு சென்ற போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%