பாவலர் கருமலைத்தமிழாழன்
திருக்குறளே செங்கோலாய் ஆட்சி செய்யத்
திகழ்கின்ற சட்டமெல்லாம் குறளாய்ச் செய்வோம்
வருவாயை ஈட்டுதற்கும் திட்டம் தீட்டி
வளர்பணிகள் செய்வதற்கும் குறளில் சொன்ன
திருவான வழிகளென்போம் ! நீதி மன்ற
தீர்ப்பெல்லாம் முப்பாலின் வழிய ளிப்போம்
கருவான வள்ளுவர்தம் மொழியே ஆட்சிக்
கட்டிலிலே அமர்வோரின் சட்டம் என்போம் !
பள்ளிகளில் கல்லூரிப் பாடம் தன்னில்
பல்கலையின் கழகத்தில் ஆய்வு தன்னில்
புள்ளிபோடும் அலுவலகக் கோப்பில் ; நீதி
புரிகின்ற மன்றத்தில் நிர்வா கத்தில்
துள்ளிவரும் விளம்பரத்தில் திரைப்ப டத்தின்
தலைப்புகளில் தொலைக்காட்சி உச்ச ரிப்பில்
பிள்ளைகளின் அமுதநாவில் பெற்றோர் வாயில்
பிறக்கவேண்டும் தமிழென்றே விதியைச் செய்வோம் !
சாதிகளின் பிரிவுமின்றி மதங்க ளென்னும்
சாய்க்கின்ற பாகுபாட்டுப் பகையு மின்றி
ஓதுகின்ற மந்திரமாய்ப் பாசு ரங்கள்
குர்ரானும் பைபிளுடன் ஒன்று சேர்ந்து
வீதிக்குள் அமைந்திருக்கும் மும்ம தத்தின்
இறைவணங்கும் இடங்களிலே ஒலிக்க வைத்தே
நீதியெல்லாம் ஒன்றாகித் தமிழர் என்ற
நிலையுர்த்தும் விதிபடைத்தே ஓங்கச் செய்வோம் !
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?