
புதுடெல்லி:
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்று, பாஸ்போர்ட், குடியிருப்பு சான்று போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்து உள்ளது.
இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்னாவின் சவுரி பகுதியில் ‘டாக் பாபு' என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. டாக் பாபுவின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்றிதழில் குறிப் பிடப்பட்டு உள்ளது.
இந்த சான்றிதழில் பிஹார் வருவாய் துறை அதிகாரி முராரி சவுகான் கையெழுத்திட்டு உள்ளார். அரசு அலுவலகத்தின் கவுன்ட்டர் மூலமாக நேரடியாக வழங்கப்பட்டுள்ள சான்றிதழில் நாயின் புகைப்படமும் அச்சிடப்பட்டு உள்ளது.
இந்த குடியிருப்பு சான்றிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து நாய்க்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழை பிஹார் வருவாய் துறை நேற்று ரத்து செய்தது.
மேலும் நாயின் பெயரில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. தவறிழைத்த அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?