பசுமை நிறைந்த வயல்கள், காற்றில் கலந்த மண் வாசனை, காலையிலே கேட்கும் கோவில் மணி ஓசை—இவையெல்லாம் சேர்ந்து உருவான அழகிய கிராமம் தான் பழையனூர். இந்த கிராமம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.
இந்த கிராமத்தின் ஓரமாக ஓடிக்கொண்டிருக்கும் வெண்ணாறு கரையின் ஓரத்தில், பழம்பெருமை வாய்ந்த சௌந்தரநாயகி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. அந்த கரையின் அருகே நின்று கோவிலைப் பார்த்தாலே, இயற்கையும் இறைவனும் ஒன்றாக இணைந்திருப்பது போல உணர முடியும். கரையிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, கோவிலின் அமைதியை இன்னும் ஆழமாக்கும்.
திருக்கோயிலுக்குள் நுழைந்தவுடன் மனம் தானாகவே அமைதியடையும். சுந்தரேஸ்வரரின் கருணை நிறைந்த பார்வையும், சௌந்தரநாயகி அம்மனின் அன்பு முகமும் கிராம மக்களின் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையாக விளங்கின. வீரமும் பக்தியும் ஒருசேர ஒளிர, ஆஞ்சநேயர் அமர்ந்திருந்தார். தட்சிணாமூர்த்தி தன் மௌனத்திலேயே ஞானத்தைப் போதித்தார். முருகரும் விநாயகரும் குழந்தைகளின் மனதிற்கு நெருக்கமான தெய்வங்களாக இருந்தனர்.
பழையனூர் கிராம மக்களுக்கு குழந்தைகள் படிக்க வேலுடையார் நடுநிலைப்பள்ளி எனும் ஆரம்பக் கல்வி கூடம் உள்ளது.
திருக்கோயிலின் அருகிலிருந்து செல்லும் மெயின் ரோட்டின் ஓரத்தில், காளியம்மன் கோவில் அமைந்திருந்தது. மாலை நேரங்களில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடும் போது, அந்த இடம் முழுவதும் சக்தி நிறைந்ததாக மாறும்.
பழையனூர் மக்கள் எளிமையும் அன்பும் நிறைந்தவர்கள். ஒருவருக்கொருவர் துணையாக வாழ்வதே அவர்களின் வழக்கம். திருவிழா நாட்களில் கோவில்கள் திருவிளக்குகளால் ஒளிரும்; பெண்களின் கோலங்கள், குழந்தைகளின் சிரிப்பு, பெரியவர்களின் பக்தி—பழையனூரின் அழகை இன்னும் கூட்டும்.
நகரத்தின் அவசரமும் சத்தமும் எட்டாத அந்த கிராமம், இயற்கையுடனும் இறைவனுடனும் இணைந்து வாழும் ஒரு சிறிய சொர்க்கம் போலவே இருந்தது. அதனால் தான், ஒருமுறை பழையனூரை பார்த்தவர், அதை மனதிலிருந்து நீக்க முடியாமல் என்றும் நினைவில் வைத்திருப்பார். பழையனூர் எங்களது சொர்க்க பூமி.

சத்யா கீர்த்திவாசன்
பழையனூர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?