பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை
Jul 30 2025
11

சென்னை:
பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை வழங்குவது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் ஆலோசனை செய்து வருகிறது.
இது தொடர்பாக அத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்லாத அளவுக்கு கடுமையான நெரிசல் காணப்படும்.
இவற்றை கருத்தில் கொண்டு பெண் பயணிகள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களில் மகளிர் மட்டும் பயணிக்கும் வகையில் 50 சிறப்பு பேருந்துகளை இயக்கலாம் என்று ஆலோசித்து வருகிறோம்.
இதேபோல், மாணவ-மாணவிகள் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்தபடி பயணிப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு என தனியாக 50 (நடைகள்) சிறப்பு பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
அதாவது, பள்ளி, கல்லூரி நேரங்களில் குறிப்பாக காலை மற்றும் மாலையில் கல்வி நிறுவன வளாகங்களுக்குள் நேரடியாக சென்று பேருந்து சேவைகள் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாலையில் கல்வி நிறுவன வளாகங்களில் இருந்து பேருந்து சேவைகளை தொடங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 25 கல்வி நிறுவனங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தேர்வு செய்துள்ளது. இதில் சுமார் 4 கல்லூரிகள் அடங்குவதோடு பெரும்பாலான பள்ளிகள் பெண்கள் மட்டும் பயிலும் மேல்நிலைப் பள்ளிகளாகும். இந்த மகளிர் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்தும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவை குறித்தும் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?