தனது வேலையை முடித்துக்கொண்டு' பை! கைஸ்! காட்ஸ் ஓன் கண்ட்ரி காலிங் மி. வில் மீட் ஆஃப்டர் த்ரீ வீக்ஸ்' என்று, தான் விடுமுறையில் வருடாந்திர விடுமுறையில் போவதை அலுவலகத்திற்கு நினைவுபடுத்தும் வண்ணமாக ஒரு குறுஞ்செய்தி யையும் பதிவிட்டு; விடுதலை உணர்வுடன், நந்தா தன் மடிக்கணினியை ஒரு துள்ளலுடன்; மூடி வைக்கும் போது அவள் மனதில் ஆனந்தம் பொங்கியது.
அங்கீகரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் சர்விஸ் சென்ட்டருக்கு ஃபோன் செய்து தன் வண்டியை சர்விஸ் செய்தாகி விட்டதா என்று உறுதி செய்து கொண்டாள். வண்டியின் மெக்கானிக் துரையுடனும் பேசினாள். ' அக்கா! வண்டி இப்பத்தான் 'புட்டு சுத்தின' பொண்ணு போல் மினுங்குது. சுத்தமா வேலை பாத்தாச்சு. வந்து எடுத்துட்டுப் போங்க' என்றான். ' ரொம்ப தாங்ஸ்;துரை! நான் கம்பெனிக்கு ஆன்லைன் பேமெண்ட் பண்ணிட்டேன். எனக்கு ஒரு உதவி மட்டும் செய். எனக்கு முக்கியமாகத் தேவைப்படும் டூல்ஸ் எல்லாம் பேமெண்ட் பண்ணி பேக் பண்ணி வை. நான் வந்ததும் உனக்கு பேமெண்ட் பண்ணிவிடடறேன். வீட்டுக்குப் போயிட்டு பேக் எல்லாம் எடுத்து வரேன். முன்னே பின்னே ஆனாலும் நீ கொஞ்சம் வெயிட் பண்ணறியா? ஷிஃப்ட் முடிஞ்சாச்சுன்னு கிளம்பிடாதே; என்ன! முக்கியமான ட்ரிப்.' என்றாள்.
' சரிக்கா! நான் வெயிட் பண்ணறேன். உங்களை அனுப்பிவிட்டே வீட்டுக்குப் போயிக்கறேன். நீங்களும் வெரசா வந்திடுங்க' என்றான் ; துரை.
தன் இல்லம் வந்ததும் குளித்து பயணத்துக்கு சித்தமானாள்.
தயாராக இருந்த backpack ஐ ஒரு தரம் செக் பண்ணிக் கொண்டாள்.
இப்போதுதான் முக்கியமான வேலை. வீட்டுக்குப் ஃபோன் போட்டு தான் கிளம்புவதைச் சொல்லணும்.
நிதானமாக டீவி முன் இருந்த இருக்கையில் அமர்ந்தவள் , காணொளி அழைப்பில் தன் பெற்றோரை அழைத்தாள்.
'ரெடியாகியாச்சா? காருக்கும் சொல்லிட்டியா?' .. அப்பா
'சாப்பிட்டாயா'..அம்மா'
இரண்டு பேருக்கும் தலையசைப்பில் பதில் சொல்லி பொதுவான வீட்டு விஷயங்கள் பேசி முடித்து இணைப்பைத் துண்டிக்க பதினைந்து நிமிடங்கள் ஆகியது. மலை போல் இருந்த வேலை சுளுவாக முடிந்ததில் ஒரு நிறைவு.
அடுத்த கணத்தில் கோபியின் காணொளி அழைப்பு. ' என்ன கிளம்பிட்டியா? வீட்டுக்குப் பேசியாச்சா ' என்று கேட்டான். 'ஆமாம் ; கோபி! குடைச்சலான கேள்விகள் இல்லை. தப்பித்தேன். கோபி! விஷ் மி சேஃப் ட்ராவல் அண்ட் லக்' என்றாள்.'ஷயுர்! யுவர் ட்ரிப் வில் கோ ஸ்மூத்லி. ஆல் வில் பி குட். ஸ்டே இன் ஸேஃப் ப்ளேஸ். கீப் காலிங் அண்ட் மெசேஜிங்' என்று கட்டைவிரல் உயர்த்த; காணொளி அமைப்பைத் துண்டித்தாள். வீட்டுக்குப் சொல்லாமல் போவது சற்றே உறுத்தினாலும்; தம்பி யிடம் சொல்லிவிட்டு செல்வது: ஆறுதலாய் இருந்தது.
அடுத்த அரை மணியில் துரையிடமிருந்து வண்டியைப் பெற்றவள், சில முக்கியமான வண்டி பழுது பார்த்தல் விஷயங்களை மீண்டும் ஒரு தரம் கேட்டுக் கொண்டாள். ' துரை எந்நேரமானாலும் உனக்குத்தான் ஃபோன் போட்டு சந்தேகம் எதுவாயினும் கேட்பேன். ஃபோனில் என் அழைப்புக்கு அலர்ட்டாக இரு. ட்ரிப் முடிந்து வரும்போது வண்டியை சர்விஸுக்கு விட வரும்போது உன்னையப் பார்க்கிறேன். விஷ் மி லக்' என்றாள். ' அக்கா!நல்லபடியாக போய் வருவீங்க. டென்ஷன் ஆகாமல் இருங்க. ராவுலே ஏழு மணிக்கப்புறம் வண்டி ஓட்டாதீங்க' என்றவனை, ஒரு தரம் 'ஹக்' செய்து விட்டு வண்டியில் ஏறி தன் வண்டியை மூன்று வார கேரளா சுற்றுபயணத்திற்கு பங்களூர்- மைசூர் ரோட்டில் திரும்பினாள்; நந்தா.
சசிகலா விஸ்வநாதன்