கர்மாவின் நீதிமன்றம்

கர்மாவின் நீதிமன்றம்



நீதிபதி ராஜசேகர் தீர்ப்பை எழுதிக் கொண்டிருந்த போது எதிரே நிற்கும் குற்றவாளியின் முகம் அவர் மனத்தைப் பிறாண்டியது.


 ''இந்த முகம் எனக்குப் புதிதல்ல...ஏற்கனவே பார்த்த முகம்...

ஆனா... எப்போ?... எங்கே?ன்னு தான் புரியலை"


சாட்சிகள் பேசினர். வழக்கறிஞர்கள் வாதாடினர். சட்டம் தன் பாதையில் நடந்தது.


ஆனால் கர்மா அமைதியாக

ராஜசேகரின் ஆழ்மன நினைவுகளைக் கிளறியது.


அன்று இரவு அவர் உறக்கம் தொலைத்தார். நினைவுகள் எங்கெங்கோ சுழன்று கொண்டிருந்தன.


அந்நினைவுகளுக்குள் கொஞ்சம் பழைய நீதிமன்றம். மண் வாசனை கொண்ட மனிதர்களின் கூச்சல்.


ஒரு நிரபராதி "அய்யா சத்தியமா நான் எந்தத் தப்பும் செய்யலை”

என்று கத்திக் கொண்டே தூக்குக்

கயிற்றுக்குள் செல்கிறான்.


அந்தத் தீர்ப்பை வாசித்த நீதிபதி... ராஜசேகர்.


அவர் கையிலிருந்த தீர்ப்பு ஒரு உயிரின் மீதான இறுதிக் கையொப்பம்.


“நீதி நிலை நாட்டப்பட்டது”

என்று அப்போது அவர் நம்பினார்.

ஆனால் கர்மா பதிவு செய்தது,

"இது ஒரு தவறான தீர்ப்பு" என்று.


பிறவிகள் மாறின. சரீரங்கள் மாறின.

ஆனால் கால தேவன் கணக்கு மட்டும்

மாறவில்லை.


இந்தப் பிறவியிலும் அவர் மீண்டும் நீதிபதி. இந்த முறையும் அவனே குற்றவாளிக் கூண்டில்.


கர்மா தன்னை நினைவூட்டவில்லை.

முன் நிறுத்தியது.


ராஜசேகர் உணர்ந்தார்.

 "ஆகா... இது வழக்கு அல்ல..

கணக்கு,"


சட்டம் சாட்சிகளின் அடிப்படையில் தண்டனை சொன்னது. கர்மா திருத்தம் கேட்டது.


ராஜசேகர் தீர்ப்பை எழுதினார்.


“சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட

நியாயம் இவ்வழக்கில் இல்லை....

எனவே குற்றவாளி விடுதலை.”


அந்த மனிதன் வெளியேறினான்.

கூட்டம் குமுறியது. ஆனால் ராஜசேகருக்குள் ஒரு பாரம் இறங்கியிருந்தது.


அன்று அவர் ஒரு மனிதனைக் காப்பாற்றவில்லை. கர்மாவிடம்

தன் கடனை அடைத்தார்.


(முற்றும்)



முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%