news Breaking News
clock

பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கும் மோடி அரசு’: ராகுல் காந்தி விமா்சனம்

பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கும் மோடி அரசு’: ராகுல் காந்தி விமா்சனம்

புது தில்லி:

‘எஃப் அண்ட் ஓ’ பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து மௌனம் சாதிக்கும் மோடி அரசு, பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கி வருவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமா்சித்தாா்.


இத்தகைய முறைகேடுகளின் மூலம், சாதாரண சில்லறை முதலீட்டாளா்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.


இதுதொடா்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: ‘எஃப் அண்ட் ஓ’ (ஊக பேரம்) பங்குச்சந்தையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடந்த ஆண்டிலேயே நான் கூறியிருந்தேன். இந்தச் சந்தை பெரிய நிறுவனங்களின் களமாகிவிட்டது. அவா்களின் முறைகேடுகளால் சிறிய முதலீட்டாளா்களின் பணம் தொடா்ந்து சுரண்டப்படுகிறது.


அமெரிக்காவைச் சோ்ந்த நிதி நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், ‘எஃப் அண்ட் ஓ’ சந்தையில் ஆயிரக்கணக்கான கோடிகளை முறைகேடாக கையாண்டதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. செபி ஏன் இவ்வளவு காலம் மௌனமாக இருந்தது? மேலும் எத்தனை நிறுவனங்கள் சந்தையில் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றன என்று சந்தேகம் எழுகிறது.


இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும் யாருடைய உத்தரவின்பேரில், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு இவ்விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? மோடி அரசு பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கி, சாதாரண முதலீட்டாளா்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளுகிறது. ஒவ்வொரு முறையும் இது தெளிவாக நிரூபணமாகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.


செபி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்துக்கு சந்தையில் இருந்து தடை விதித்ததோடு, அந்நிறுவனம் முறைகேடாக ஈட்டிய ரூ.4,843 கோடிக்கும் அதிகமான லாபத்தைப் பறிமுதல் செய்துள்ளது.


2023, ஜனவரி முதல் கடந்த மே வரையிலான விசாரணை காலகட்டத்தில் ஜேன் ஸ்ட்ரீட் நிகர அடிப்படையில் ரூ.36,671 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக செபி கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுதொடா்பாக செபி தலைவா் துஹின்காந்த பாண்டே திங்கள்கிழமை கூறுகையில், ‘ஜேன் ஸ்ட்ரீட் போன்று வேறு எந்த நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை கண்டறியப்படவில்லை’ என்றாா்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News