நல்லதாக நாலு வார்த்தை

நல்லதாக நாலு வார்த்தை


நல்லதாக நாலு வார்த்தை. ஒரு நிமிடம் செவி மடுப்பீர் நண்பர்களே! 


நமது இரவுகள் நீளமானவை. அவற்றை நெடுந்தூக்கத்தால் சுருக்க வேண்டாம். நமது பகல்கள் தூய்மையானவை. அவற்றை பாவங்களால் அசுத்தப்படுத்த வேண்டாம். வாழ்வில் நாம் போகிற வழி சாக்கடையாக அமைந்துவிட்டாலும், போய்ச் சேருகிற இடம் கோயிலாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வீரிய வேத வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். 


வாழ்வில் நம் செயல்கள் நமது சொற்களைப் பிரதிபலிக்க வேண்டும். ஒன்று சொன்னாலும் "நச்" சென்று சொல்ல வேண்டும். அது மந்திரச் சொல்லாக ஒலிக்க வேண்டும். நாம் சொல்வதை உலகம் உன்னிப்பாகக் கேட்க வேண்டும். நமது சொல்லும், செயலும் மானுட சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும். நமது சொல், செயல் ஒவ்வொன்றும் அர்ஜுனன் அம்பு போல இருக்க வேண்டும். எப்படி? 


எடுக்கிறபோது ஒன்று. தொடுக்கிறபோது நூறு. படுகிறபோது ஆயிரம். நமது சொல்லும், செயலும் நம்மை எதிர்த்து நிற்பவனை நம்முடன் இணைத்துக் கொள்வதாய் இருக்க வேண்டும். உலகின் எந்த மூலையில் போர் வெடித்தாலும் இங்கு நமக்கு வலிக்க வேண்டும். அதற்கு நாம் சத்திரியனாக இருக்கத் தேவை இல்லை, சாணக்கியனாக இருக்க வேண்டும். இதைத்தான் அதிகார வர்க்கம் சிந்திக்க வேண்டும். 


எழுத்தாளர் லா. ச. ரா. சொன்னது போல் நாம் "தீ" என்று எழுதினால் காகிதம் பொசுங்கும் வாடை வரவேண்டும். அதுதான் நமக்கு சொல்லிலும், செயலிலும் சரஸ்வதி கடாட்சம். கனவு மெய்ப்பட வாழ வேண்டும். அதுதான் வாழ்வாங்கு வாழும் வீரியமான வாழ்க்கை. 


ஒருவன் பிறக்கும் போது அவனுக்கு மூச்சு இருக்கிறது. ஆனால் பெயர் இல்லை. அவன் இறந்தபோது ஒரு பெயர் (சடலம்) இருக்கிறது. ஆனால் மூச்சு இல்லை. அவ்வாறு மூச்சுக்கும், அந்தப் பெயருக்கும் இடையே நிகழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது எவரும் பதில் காண முடியாத கேள்வி. மரணம் என்பது எவரும் எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாத பதில். எனவே பதில் நம்மை எட்டும் வரை கேள்வியை ரசிப்போம். புலம்பல்களைத் தவிர்ப்போம். நமது இருப்பை அர்த்தமுள்ளதாக்கி, மண் பயனுற வாழ்வோம். ஏனெனில், வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்க வளத்துடன். 


 பாளை. கணபதி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%