தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 3-–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இந்திய அணியில் காயத்தால் சுப்மன் கில் விலகியதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பிடித்தார். தென்ஆப்பிரிக்க அணியில் ஒரே மாற்றமாக அன்ரிச் நோர்டியாவுக்கு பதிலாக ஜார்ஜ் லின்டே சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.
ஸ்கோர் 63-ஐ எட்டிய போது (5.4 ஓவர்) அபிஷேக் ஷர்மா 34 ரன்னில் (21 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) லெக்சைடில் எழும்பி வந்த பந்தை அடிக்க முயற்சித்த போது அது கையுறையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டி காக்கின் கையில் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. சாம்சன் தனது பங்குக்கு 37 ரன்கள் (22 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் (5 ரன்) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
4-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா களம் புகுந்தார். அபாரமாக ஆடிய திலக் வர்மா 30 பந்தில் அரைசதத்தை கடந்தார்.
பாண்ட்யா 16 பந்துகளில் தனது 7-வது அரைசதத்தை கடந்து அசத்தினார். இவர்களின் சரவெடியான பேட்டிங்கால் இந்திய அணி எளிதில் 200-ஐ தாண்டியது. இருவரும் கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.
ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் (25 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), திலக் வர்மா 73 ரன்களும் (42 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். முன்னதாக பாண்ட்யா சர்வதேச 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன் மைல்கல்லை கடந்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த மைதானத்தில் ஒரு அணியின் 2-வது சிறந்த ஸ்கோராகும்.
அடுத்து 232 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியில் ரீஜா ஹென்ரிக்ஸ் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினாலும் குயின்டான் டி காக்கும், டிவால்ட் பிரேவிசும் அதிரடியில் மிரட்டினர். அபாயகரமான இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பிரித்தார். அவரது பந்தில் டி காக் (65 ரன், 35 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) அவரிடமே பிடிபட்டார். அடுத்த ஓவரில் பிரேவிசை (31 ரன், 17 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பாண்ட்யா காலி செய்தார். அத்துடன் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 8 விக்கெட்டுக்கு 201 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும், தொடர்நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3–-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. முதலாவது, 3-வது ஆட்டங்களில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருந்தன. பனிமூட்டத்தால் 4-வது ஆட்டம் ரத்தானது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 8-வது தொடராக இது அமைந்தது.
முன்னதாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-–2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 2–-1 என்ற கணக்கில் வென்று இருந்தது.
2025-ம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்த இந்திய அணி இனி ஜனவரி மாதம் நியூசிலாந்துடன் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாட இருக்கிறது.