தான் அதிமுக எதிரி என்பதை அன்வர் ராஜா வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்” - தமிழக பாஜக
சென்னை:
“தமிழக மக்களின் நலனை விட, வகுப்புவாத, பிரிவினைவாத ஆதரவும், சுயநல மதவாத அரசியலுமே முக்கியம் என வெளிப்படையாக அறிவித்த அன்வர் ராஜாவுக்கு நன்றி” என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார் என்ற செய்தி, இன்பத் தேன் வந்து பாய்வது போல இருந்தது. அதிமுக தான் அவருக்கு அரசியலில் அடையாளம் தந்தது.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று எத்தனை உயர் பதவிகளை ஒரு கட்சி தந்தாலும், எல்லாவற்றையும் விட, தமிழ் மக்களின் நலனை விட தன் மதமே முக்கியம் என்பதை, திமுகவில் இணைந்ததன் மூலம் அன்வர் ராஜா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தன் மதத்திற்காக, உயர் பதவிகளை தந்த, வாழ்க்கையில் அத்தனை வளங்களையும் தந்த கட்சியை துறந்திருக்கிறார் அன்வர் ராஜா. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. பெற்ற அன்னையைப் போல, பிறந்த தாய் மதமும் முக்கியம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உணர்வின்றி இருக்கும் இந்துக்களுக்கு, தன் கட்சித்தாவல் மூலம், செவிட்டில் அறைந்து பாடம் சொல்லியிருக்கிறார் அன்வர் ராஜா.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பார்கள். அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்பார்கள். ஆனால், இந்த உபதேசங்கள் எல்லாம் இந்துக்களுக்கு மட்டும் தான். மற்ற மதத்தினருக்கு இல்லை. மற்ற மதத்தினர் எந்த கட்சியில் இருந்தாலும் எந்த அமைப்பில் இருந்தாலும் தங்கள் மதத்தையே முன்னிறுத்துகிறார்கள். ஆனாலும் அவர்களை மதச்சார்பற்றவர்கள் என போற்றி புகழ்கிறார்கள்.
இன்றைய தமிழக பாஜக தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அதிமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக அன்வர் ராஜா இருந்தார். ஆனால், அங்கு போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற மறைமுகமாக உள்ளடி வேலை செய்தார்.
அங்கு தேர்தல் பணிக்காக சென்றிருந்தபோது இதை நான் நேரிலேயே அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அன்று கூட இருந்து குழி பறித்தவர், இன்று தான் எதிரி என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
அன்வர்ராஜா சரியான இடத்தை வந்தடைந்து இருக்கிறார். மக்கள் விரோத தீய சக்தி திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில், தேர்தல் அரசியலுக்காக, ஓட்டு பிச்சைக்காக தமிழகத்தின் வளர்ச்சியையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளாமல், மக்களிடையே குழப்பம் விளைவித்து, அனைவரையும் பிரித்து வகுப்புவாத, பிரிவினைவாத,சுயநல மதவாத செய்வதில் திமுகவின் கட்சியும் ஆட்சியும் தீவிரமாக செயல்படுகிறது.
அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறும் முதல்வர் மு.க ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. அந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது தீரா வெறுப்பு கொண்டவர். ஆனால் அவரை தேடி சென்று சரணடைந்திருக்கிறார் அன்வர்ராஜா. இதன் மூலம், திமுக இந்துக்களின் விரோதி என்பதையும், தன்னைப் போன்றவர்களின் நண்பன் என்பதையும் குறிப்பால் உணர்த்தி இருக்கிறார்.
அன்வர் ராஜா சொல்லாமல் சொல்லி இருக்கும் இந்த செய்தியால், திமுகவில் இருக்கும் இந்துக்களும், நடுநிலை என்ற பெயரில் தன்னை உணராமல் இருக்கும் இந்துக்களும் இனியாவது கொஞ்சம் உணர்வு பெறுவார்கள் என்று நினைக்கிறேன். நம்புகிறேன். அன்வர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.