ஆயிரம் ஆண்டுக்கு முன்பே நீடித்த வளர்ச்சிக்கு திட்டமிட்டவர் ராஜராஜ சோழன்: ஆ.ராசா புகழாரம்
சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு தொல்லியல் மாநாட்டில் ‘தொல்லியல் நோக்கில் சோழர்கள் அன்றும் - இன்றும்’ என்ற ஆய்வு கட்டுரை நூலை மலேசிய அமைச்சர் அ.சிவநேசன் வெளியிட்டார். உடன் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தமிழ் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன தலைவர் க.கலைமதி, பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவன தலைவர் சங்கர் கலியன், ரஷ்யா தமிழ்ச் சங்கத் தலைவர் சேகர் சாமியப்பன், ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்ற தலைவர் அருள் ஆறுமுகம், திமுக செய்திதொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழ்மொழி செழித்து வாழ்வதாகவும், ஆயிரம் ஆண்டுக்கு முன்பே நீடித்த வளர்ச்சிக்காக திட்டமிட்டு செயல்பட்டவர் ராஜராஜ சோழன் எனவும் ஆ.ராசா எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.
பன்னாட்டு தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (தமிழ்நாடு), தமிழ் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனம் (அமெரிக்கா), ரஷ்யா தமிழ்ச் சங்கம் (ரஷ்யா), ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் (மலேசியா) ஆகியவை சார்பில் ‘பன்னாட்டு தொல்லியல் மாநாடு- 2025’ சென்னையில் நேற்று நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மலேசியாவின் பேரா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அ.சிவநேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். தொடர்ந்து ‘தொல்லியல் நோக்கில் சோழர்கள் அன்றும் - இன்றும்’ என்று ஆய்வு கட்டுரை நூலை அமைச்சர் சிவநேசன் வெளியிட்டார்.
முதல் பிரதியை அமெரிக்க மருத்துவர் மேனகா நரேஷ் பெற்றுக்கொண்டார். இதையடுத்து உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழுக்கு தொண்டாற்றிய 20 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன தலைவர் க.கலைமதி வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டில் ஆ.ராசா பேசியதாவது: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும்கூட தன்னை செழுமைப்படுத்திக் கொண்டு வாழும் ஒரே மொழி தமிழ் மொழி. இன்றைய அரசியல்கூட மொழியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சி மூவேந்தர்களின் ஆட்சி என சொல்லப்பட்டாலும், தமிழகம் ஒன்றாக இருந்தது சோழப் பேரரசின் ஆட்சி காலத்தில்தான்.
அன்றைய காலத்தில் ஏரிகளை கட்டிய ராஜராஜ சோழன், அதன் கல்வெட்டுகளில் “எனக்கு பின் ஏரிகளை யார் சரியாக பராமரிக்கிறார்களோ அவரது காலை எனது தலையில் வைத்து வணங்குவேன்” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீடித்த வளர்ச்சிக்காக திட்டமிட்டவர் ராஜராஜன். இவ்வாறு பேசினார்.
முன்னதாக அமைச்சர் சிவநேசன் பேசும்போது, “சமூக முன்னேற்றம் என்பது 1940-களில் வந்தது அல்ல. ராஜராஜசோழனின் ஆட்சிக் காலத்திலேயே வந்திருக்கிறது. வணிகம் என்ற போர்வையில் வந்து நம்மை 400 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் மத்தியில், வளமான ராணுவம், திறமையான நிர்வாகம் இருந்தும் ராஜராஜ சோழன் வணிகத்துக்காகவே அண்டை நாடுகளுக்கு சென்றுவந்தார். எனவே சோழர்களை பற்றி எந்த கோணத்தில் ஆய்வு செய்யவேண்டும் என்பது முக்கியம்” என்றார்.
இந்நிகழ்வில் திமுக செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவன தலைவர் சங்கர் கலியன், செயலாளர் ஜான்சிராணி, ரஷ்யா தமிழ்ச் சங்கத் தலைவர் சேகர் சாமியப்பன், ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்ற தலைவர் அருள் ஆறுமுகம் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.