தவிடுபொடியான திட்டம்

தவிடுபொடியான திட்டம்


வீட்டின் பின்புறம் நின்று யாருடனோ மொபைலில் சன்னக் குரலில் பேசிக் கொண்டிருந்தான் சந்துரு.


அதை ஒட்டுக் கேட்கும் விதமாய் சமையலறை ஜன்னலருகே வந்து காதைத் தீட்டிக் கொண்டாள் ரூபிணி.


  "ஆமாம்பா... என் பொண்டாட்டி கிட்ட ஒரு பெரிய கெட்ட பழக்கம் என்ன?...ன்னா கதவைச் சாத்தாமல் அப்படியே திறந்து விட்டுட்டு பக்கத்து வீட்டுக்கோ... எதிர் வீட்டுக்கோ... அரட்டை அடிக்கப் போயிடுவா!... அங்க போய் மணிக்கணக்கில் அரட்டையில் மூழ்கிடுவா.... நான் பல நாள் ஆபீசிலிருந்து வந்து பார்க்கும் போது கதவு திறந்திருக்கும் உள்ளே அவ இருக்க மாட்டா"


தன்னை பற்றித்தான் பேசுகிறான் என்பது தெரிந்ததும் கூர்ந்து கவனிக்கலானாள் ரூபிணி.


 "நெனச்சுப்பாரு... பட்டப் பகல்ல... அதுவும் ஆள் இருக்கும் போதே வீடு புகுந்து கொள்ளையடிக்கிற இந்தக் காலத்தில் இப்படி லட்டு மாதிரி கதவை திறந்து விட்டுட்டு போயிட்டா என்ன நடக்கும்?"


எதிர்முனை ஏதோ சொல்ல,


 "கரெக்ட்... அதைத்தான் நானும் நெனைச்சிட்டு இருக்கேன்....அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால்தான் சிலதுக திருந்தும்... "ஷாக் ட்ரீட்மென்ட் ஈஸ் தி பெஸ்ட் ட்ரீட்மென்ட்"... அதனால அடுத்த தடவை நான் வரும்போது வீடு திறந்து கிடந்தா நானே சும்மாவாச்சும் பீரோவில் இருக்கிற துணிமணிகளை எடுத்து வீடு புராவும் இறைச்சுப் போட்டுட்டு... லாக்கரை திறந்து நகைகளை எடுத்து வேற இடத்தில் வெச்சிட்டு... அதைக் காலி பண்ணிட்டு... பீரோவுக்கு பின்புறமாக ஒளிஞ்சுக்கப் போறேன்!.. எப்படியும் அவ வந்து துணிமணிகள் இறைந்து கிடப்பதையும்... லாக்கர் திறந்து கிடப்பதையும்... பார்த்துக் கத்துவா!... அந்தச் சமயத்தில் பீரோவுக்கு பின்னாயிருந்து முகத்துக்கு கர்ச்சீப் கட்டிட்டு வெளியே வந்து அவ வாயை பொத்தி மிரட்ட போறேன்"


ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த ரூபிணி, "ஓஹோ... அப்படியா சமாச்சாரம் நீங்க எனக்கு ஷாக் டிரீட்மெண்ட் கொடுக்கப் போறீங்களா?... அதையும் பார்க்கிறேன்!" உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.


மறுநாள் மாலை,


 பக்கத்து வீட்டில் அரட்டைக் கச்சேரியை முடித்து விட்டு வீட்டிற்குள் வந்த ரூபிணி அறையெங்கும் துணிமணிகள் இறைந்து கிடப்பதையும், லாக்கர் திறந்து கிடப்பதையும், பார்த்து சற்றும் அதிர்ச்சி இல்லாமல் 'எப்படா கணவன் வந்து வாயைப் பொத்துவான்?' என்று காத்திருந்தாள்.


பீரோவுக்கு பின்னாலிருந்து கர்சீப் கட்டிய முகத்துடன் வெளியே வந்தவன் ரூபிணியின் பின்புறமாய் அவளை கட்டிப் பிடித்து வாயைப் பொத்த, அந்தக் கையை விடுவித்த ரூபிணி, "ம்ஹும்... இந்த இறுக்கம் போதாது இன்னும் கொஞ்சம் இறுக்கி கட்டுங்க அத்தான்!" என்று சிரிப்புடன் சொன்னாள்.


அப்போதுதான் வாசல் கதவை தாண்டி உள்ளே வந்தான் சந்துரு.


அவனைப் பார்த்தவுடன் விழிகளை பெரிதாக்கிக் கொண்ட ரூபினி, "நீ... நீங்க... எப்படி... வெளியிலிருந்து?" கேட்டபடி தலையை திருப்பி பார்த்தவள் ஒரு உண்மை திருடனை நேரில்... அதுவும் அவ்வளவு குளோசப்பில் பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.


அதற்குள் சுதாரித்துக் கொண்ட சந்துரு வெளியே ஓடும் என்ற அந்த திருடனைத் தடுக்க முற்பட்டான்.


பழுத்த அனுபவசாலியான அந்தத் திருடன் லாவகமாய் வளைந்து, குனிந்து, ஓடி வாசலுக்கு வெளியே தெருவில் இறங்கினான்.


அவனை துரத்திக் கொண்டு ஓடுவதா?... இல்லை ரூபிணியைக் எழுப்பி காப்பாற்றுவதா?" என்ற குழப்பத்தில் நின்ற சந்துரு, "ரூபிணியைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்" என்ற முடிவுடன் அவளருகே ஓடினான்


முற்றும்.


முகில் தினகரன் 

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%