முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில், அவர் குறித்து பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவில், "மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர். இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர். தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர். சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர். சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர். குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர். கொள்கை வழி நின்றவர்.
கனிவின் திருவுருவம். இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.
தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.
'மக்களிடம் செல்' என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்கும் வரை கூட்டணியை ஏற்க மாட்டோம்: டிடிவி தினகரன்
தஞ்சாவூர், செப். 15–
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”இந்த முறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி முத்திரை பதிக்கும்.
நாங்கள் உறுதியாக சொல்கிறேன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம் பிடிக்கின்ற கூட்டணி, ஆட்சி அமைக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்.
அதற்கான அர்த்தத்தை மே மாதம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும் வரை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை” என்றார். 10 நாட்கள் செங்கோட்டையன் கெடு விதித்தது தொடர்பான கேள்விக்கு, ”அது செங்கோட்டையன் விவகாரம், அதற்கு பதில் அவரே தருவார்” என்றார். எடப்பாடியின் டெல்லி பயணம் தொடர்பான கேள்விக்கு, ”டெல்லி செல்வது, அவருடைய விஷயம். அவர் செல்கிறார்” என்றார்.