சென்னை, மதுரையில் 3 இடங்களில் திருநங்கையர்களுக்கு பாதுகாப்பான ஆதரவு ‘‘அரண்” இல்லங்கள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மதுரையில் 3 இடங்களில் திருநங்கையர்களுக்கு பாதுகாப்பான ஆதரவு ‘‘அரண்” இல்லங்கள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்



சென்னை, அக்.13–


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் சென்னை – செனாய் நகர் மற்றும் மதுரை மாநகர் – அண்ணா நகர் ஆகிய இடங்களில் 43.88 லட்சம் ரூபாய் செலவிலான ”அரண்” திருநங்கையர்களுக்கான இல்லத்தினை திறந்து வைத்தார்.


திருநங்கைகள் எதிர்நோக்கும் சமூக, மனநலம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்களை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பான, மதிப்பும் மரியாதையும் நிறைந்த, ஆதரவான வாழ்விட சூழலை உருவாக்கும்நோக்கில், முதற்கட்டமாக, சென்னை – செனாய் நகர் மற்றும் மதுரை மாநகர் – அண்ணா நகர் ஆகிய இடங்களில் 43.88 லட்சம்ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரண் இல்லங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


பாலினம் அடையாளம் காணும் பருவத்தில், பயம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, குடும்பம் மற்றும் கல்வியில் இருந்து விலகி, ஆதரவற்று நகரங்களுக்கு வரும் திருநங்கை/திருநம்பி/இடைபாலினரை பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் இது அவசியமாகிறது.


குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கை/திருநம்பி/இடைபாலின நபர்களுக்கு 1 வாரம் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பான மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்குதல் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெற்ற எந்த மாவட்டத்தைச் சேர்ந்த நபரும் பயன்பெறுவதோடு, ஒவ்வொரு இல்லத்திலும் 25 நபர்கள் தங்க அனுமதிக்கப்படுவர்.


மேலும் இந்த இல்லங்களில், உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரியில் இடை நின்றவர்கள் கல்வியைத் தொடர உதவுதல், உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதல், உள்ளுறைவோரின் தேவைகளுக்கேற்ப உளவியல் மற்றும் தொழில்முறை ஆலோசனைகள் வழங்குதல், சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவி வழங்குதல், திருநங்கையருக்கு எதிரான வன்முறை, பாகுபாடுகள் குறித்து புகார் அளிக்க உதவுதல், இலவச சட்ட உதவி மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை மீண்டும் குடும்பத்துடன் இணைக்க முயற்சித்தல் மற்றும் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்படும்.


தமிழ்நாடு அரசின் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகள், திருநங்கையர் சமூகத்தின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.


இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர், வளர்மதி, சமூக நலத்துறை இயக்குநர் மா.சௌ.சங்கீதா, மற்றும் சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் சரண்யா அறி, ஆகியோர் கலந்து கொண்டனர் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%