நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மோனோஜெனிக் - மெச்சூரிட்டி ஆன்செட் டயாபடிக் ஆப் தி யங்' என்ற நீரிழிவு நோய், மரபணுக் கோளாறால் ஏற்படுகிறது. இதுவே, 'மோடி' வகை நீரிழிவு நோய் எனப்படுகிறது. ஒற்றை மரபணு பிறழ்வின் விளைவாக, இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, 'மோனோஜெனிக்' நீரிழிவு ஏற்படுகிறது.
பொதுவாக தற்போது சொல்லப்படும், டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு வகைகளிலிருந்து இது மாறுபட்டது. டைப் 1 வகை, கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறைந்து போவதால் ஏற்படுவது; டைப் 2 வகை, நம் உடலில் உள்ள செல்கள் இன்சுலினை ஏற்காத தன்மையால் ஏற்படுவது.
இவற்றிலிருந்து மாறுபடும், 'மோனோஜெனிக்' நீரிழிவு நோயிலும் பல வகைகள் உண்டு. அவற்றில் முக்கிய இரண்டு வகைகள், 25 வயதுக்கு முன்னதாகவே கண்டறியப்படும் நீரிழிவு மற்றும் குழந்தை பிறந்த ஆறு மாதங்களிலேயே கண்டறியப்படும் நீரிழிவு.
குடும்பத்தில், பாரம்பரியமாகவும், தொடர்ச்சியாகவும், பல தலைமுறைகளாக நீரிழிவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 25 வயதுக்கு முன்பே நீரிழிவு கண்டறியப்பட்டதாயின், அது ஒரு வகை மோனோஜெனிக் நீரிழிவு.
பிறந்த ஆறு மாதத்திலேயே நீரிழிவு கண்டறியப்படுவது, மற்றொரு வகை, மோனோஜெனிக் நீரிழிவு. இளம் வயதில் கண்டறியப்படும் நீரிழிவு, மரபணு சார்ந்ததே தவிர, கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறைபாட்டால் அல்ல.
'சி-பெப்டைடு' என்ற பரிசோதனை மூலம், எவ்வகை மோனோஜெனிக் நீரிழிவு ஏற்பட்டுள்ளது என்று கண்டறியலாம். நோயின் வகையை வைத்து, 'சல்பனைல் யூரியா' மாத்திரையே போதுமா அல்லது ஊசி தேவையா என்பதையும் கண்டறியலாம்.
முக்கியமாக, மரபணு பரிசோதனை மிக அவசியம். அதைச் செய்தால் மட்டுமோ, மோனோஜெனிக்கில் உள்ள பலவகைகளில், எவ்வகை பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். மேற்கு நாடுகளில், மோனோஜெனிக் நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிய, கால்குலேட்டர்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
சிகிச்சை முறைகள் இவ்வகையில், லேசான நீரிழிவு நோய்க்கு, பொதுவாக சிகிச்சை தேவையில்லை. உணவு முறை மாற்றத்திலேயே, பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும். குறைந்த அளவு பாதிப்பு தென்பட்டால், சல்பனைல் யூரியா மருந்து தேவைப்படும். சற்று அதிகரித்த பாதிப்பு தென்பட்டால், இன்சுலின் அல்லாமல், குறைந்த அளவு சல்போனிலுாரியா மருந்து தேவைப்படும்.
பாதிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்தால், இன்சுலினைத் தவிர்க்கலாம். நீரிழிவு நிர்வாகம் இந்த வியாதியை பற்றி துல்லியமாக மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது மற்றும் பத்திரிகைகளில் செய்திகளாக வெளியிட வேண்டும். ஆலோசனைகள் நீரிழிவு நோய் உள்ளவர்கள், காலமெல்லாம் இன்சுலின் போட தேவையில்லை. நோயாளியின் உடலில் சர்க்கரை அளவு, நுாறு மிலி ரத்தத்தில், 400 மிலி கிராமுக்கு மேலாக இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்த்தே தீர வேண்டும்.
கட்டுக்கடங்காத சர்க்கரை அளவு உள்ளவர்கள், மூன்று மாத சர்க்கரையின் அளவு மற்றும் முக்கிய உறுப்புகளான இருதயம், சிறுநீரகம், மூளை நரம்புகள் வேலைத்திறன் பாதிப்புகளைக் கண்டறிந்து, விளைவுகள் இல்லாமல், பல புதிய நவீன மாத்திரைகளை உட்கொண்டு சர்க்கரை அளவை குறைக்கலாம். நீரிழிவு நோய் கடுமையாக இருந்தால், ஸ்ட்ரோக், மாரடைப்பு, இதய வீக்கம், இதய செயல் இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.