சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றம்

சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றம்


திருவனந்தபுரம்:


சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது.


இதற்கு அப்போதைய அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.


முதலில் 4 கிலோ தங்கம் வரை அபகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர்தான், இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர். அதற்கு அதிகாரிகள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளும் உடந்தையாக இருந்த தகவலும் அடுத்தடுத்து வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இது ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடியை தந்தது.


பின்னர் கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக்குழு கையிலெடுத்தது. முதற்கட்டமாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.


இந்த 10 பேரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கைது நடவடிக்கையை தொடர்ந்தனர். அந்தவகையில் இதுவரை உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, பத்மகுமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதில் பத்மகுமார் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழுவினர் தயாராக இருந்தனர்.


அதில், 2017-ம் ஆண்டு முதல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் செயலாளராக பணியாற்றிய ஜெயஸ்ரீயும் ஒருவர். இதனை தொடர்ந்து முன்ஜாமின் கேட்டு அவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பிறகு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 2017-ம் ஆண்டு திருவிதாங்கூர் தேவஸ்தான செயலாளராக பொறுப்பேற்றதாகவும், இந்த காலக்கட்டத்தில் சபரிமலை தொடர்பான எந்த பிரச்சனையிலும் தலையிடவில்லை என்றும் கூறியிருந்தார். எனவே தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ஜெயஸ்ரீயை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதே சமயத்தில் சிறப்பு விசாரணை அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிறப்பு விசாரணைக்குழுவினர் அறிக்கையை தாக்கல் செய்தனர்.


அப்போது, தங்கம் அபகரிப்பு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கை நடந்துள்ளதாகவும் சிறப்பு விசாரணைக்குழுவினர் முதல் தகவல் அறிக்கையாக தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை, இந்த வழக்கின் விசாரணையை கையிலெடுக்க முடிவெடுத்தது. அதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. ஆனால் அதற்கு சிறப்பு விசாரணைக்குழு எதிர்ப்பு தெரிவித்தது.


இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றி கொல்லம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கும் உத்தரவிட்டுள்ளது.


ஏற்கனவே ஆளும்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பது சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. தற்போது அமலாக்கத்துறைக்கு இந்த விசாரணை செல்வதால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேலும் சிக்குவார்கள் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


மேலும் இந்த விவகாரத்தில் பங்கஜ் பண்டாரி மற்றும் நகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%