சபரிமலை கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்தது: டிசம்பர் 30–-ல் மீண்டும் நடைதிறப்பு
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்து கோயில் நடை சாத்தப்பட்டது. டிசம்பர் 30-ல் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி மாலையில் திறக்கப்பட்டது. மறுநாள் முதல் (கார்த்திகை 1-ந்தேதி) நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
அந்த வகையில் 41 நாட்கள் வழிபாட்டின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. நாள் முழுவதும் தங்க அங்கி அலங்காரத்தில் காட்சி அளித்த அய்யப்பனை, பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு புஷ்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அத்துடன் மண்டல சீசன் நிறைவுக்கு வந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கலசாபிஷேகம், களபாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இரவு 10.45 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கோயில் நடை சாத்தப்பட்டது.
மண்டல பூஜை நாளில் 37 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
30-ந்தேதி நடை திறப்பு
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகர விளக்கு பூஜை 14-ந்தேதி நடைபெறும். அன்று ஜோதி வடிவில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மண்டல சீசன் நிறைவு பெற்றதையொட்டி திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் கே.ஜெயகுமார் சன்னிதானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.332 கோடி வசூல்
நடப்பு மண்டல சீசனில் 31 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் ரூ.332.77 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
இந்த வருவாய் கடந்த சீசனை விட கூடுதலாகும். அய்யப்ப பக்தர்களிடையே அதிகரித்து வரும் பக்தியின் வெளிப்பாடு தான் வருமான உயர்வுக்கு காரணம். கேரள ஐகோர்ட் தலையீட்டின் காரணமாக, நடப்பு மண்டல காலத்தில் பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
புல்மேடு வனப்பாதையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்” என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.