அவனுக்கு தொல்பொருள்த் துறையில் வேலை. அந்த துறையின் கீழ் உள்ள ஆலையங்களுக்குச் சென்று சிலைகளை பழமை மாறாமல் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும்.
அப்படித்தான் அவன் திருக்கோகர்ணம் வந்தான். இதோ ஓராண்டு கடந்து விட்டது.
அங்கு உள்ள சிவன் கோவிலும் பிரகதாம்பாளும் பிரசித்தம். பழமையான குடைவரைக் கோவில். ஒவ்வொரு தூணிலும் விதவிதமான சிலைகள். பல்லவர்கள் கட்டிய கலைக் கோவில் அங்கேதான் அவனுக்கே வேலை..இன்னும் இரண்டு ஆண்டுகளாவது அங்குதான் பணி. எனவே அவற் தன் பெற்றோருடன்.. தம்பி தங்கைகளுடன் திருக்கோகர்ணம் வந்து விட்டான். அக்ரகாரத்தில் வீடு ஒத்திக்கு போட்டு குடியேறினான்.
அது சாஸ்திரம் சம்பிரதாயத்தில் ஊறிப்போன கிராமம். சாதி மதம் சுத்தம்பார்க்கும் மக்கள்.
கோவிலைச் சுற்றித்தான் ஊர். அர்ச்சகர்கள் ஒருபுறம்.. கணபாடிகள் ஓதுவார்கள்.. மேளக்காரர்கள் ஒருபுறம் குடியிருப்பு.
அங்கே தான் அவளும் இருந்தாள்.. அவள் ஒரு அழகுப்பதுமை.. கோவிலில் நாதஸ்வரம் வித்துவான் சண்முகம் பெற்ற மகள். அவர்கள் தன் வாழ்வையே கோவிலுக்காக அர்ப்பணித்த குடும்பம்.
அந்தக் கோலிலின் கோபுரத்துச் சிலையழகா.. இல்லை அவளின் சிரிப்பழகா.. என்று அவன் வியப்பது உண்டு.
ஒருநாள் கோவில் கிணற்றில் நீர் எடுக்க அவள் வந்தாள். அவனோ சிற்பங்களை தூய்மை செய்தபடி அவளைப் பார்த்தான். அவளும் பார்த்தாள் கண்ணொடு கண் கலந்தது. காதல் அரும்பியது
சாதி சம்பிரதாயம் யாவும் மறைந்து காதல் வென்றது.
அவன் குடும்பமோ ஆச்சாரமானது. அவனுக்குகூட அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து பெண்தேடிக் கொண்டிருக்கினர்.
ஆனால் அவனுக்கோ அந்த கோவில் சிலைமீதுதான் கண்.
கண்ணொடு கண் நோக்கின் காதல் அரும்பியது. அவளை அவன் பார்த்தான். பருகினான். அவனும் நோக்கினான். அவளும் நோக்கினாள்..
ஒருநாள் அவன் கனவு கலைந்தது. அவன் குடும்ப பாரம்பரியம் அவனைக் கட்டிப் போட்டது. ஆலங்குடி கோவில் அர்ச்சகர் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. இதோ இன்று இரவு திருக்கோகர்ணத்தில் மாப்பிள்ளையழைப்பு.
விடிந்தால் திருமணம்.
அவளை அவனால் மறக்க முடியவில்லை. மெல்ல திருமண மண்டபத்தை விட்டு வெளியே நடந்தான். அக்ரகாரத்தைக் கடந்தான். அந்த மேளக்காரர் வீட்டு வாசலில்.. அலள் நிற்கிறாள். அவனைப் பார்த்து அழுத கண்களை துடைத்தாள். அவன் ஒரு முடிவோடு இப்போது அவளின் கரத்தைப் பற்றினான். அவனும் அவளும் கரங்கள் கோர்த்து.. சமுதாய வீதியில் நடந்து.. அக்ரகாரத்தைக் கடந்து.. திருக்கோலிலின் முன் நின்றனர். அதோ பிரகதாம்பாள் ஆசீர்வதிக்கிறாள்! அந்த கோவில் சிலைகள் ஆராதித்ததன.. கோபுர பொம்மைகள் புன்னகைப் பூக்களைத் தூவுகின்றன.
வே.கல்யாண்குமார்.