கர்ணனும் கஞ்சனும்

கர்ணனும் கஞ்சனும்


தன் பாக்கெட்டைத் துழாவினான் பரதன். ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்று கையில் சிக்கியது. ஒரு நிமிடம் யோசித்தான். பின் தெரு ஓரம் அமர்ந்திருந்த அந்த யாசகனின் தட்டில் அதைப் போட்டான்.


 "ஐயா, கர்ண மகாபிரபு, நீங்க நல்லா இருக்கணும்" வாயார வாழ்த்தினான் யாசகன். 


"சிவ சிவா, நான் என்றுமே சல்லிக் காசு கூட எவனுக்கும் ஈந்ததில்லை. இன்று சுளையாக ஐம்பது ரூபாய் தர்மம் செய்திருக்கிறேன். எனக்கே வேலை கிடைக்குமாறு அருள் செய்து விடு அப்பனே சிவ சிவா " - பரதன் கைமாறு கருதிச் செய்த தர்மத்தை சாட்சி வைத்து சிவனிடம் பேரம் பேசினான். தான் தர்மம் செய்துவிட்ட சிவத்தெம்பில் நேர்காணலை திமிரோடு சந்தித்தான். 


மறுநாள். ஆட்சேர்ப்பு அலுவலக வாயிலில் இன்டர்வியூவில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் ஓட்டப்பட்டிருந்தது. சிவனின் தர்மக் கணக்கு வேறுவிதமாக இருந்தது. தேர்வானவர்கள் லிஸ்டில் பரதன் பெயர் இல்லை! பரிதாபமானான் பரதன். விரக்தி ஒருபுறமும், வேதனை ஒருபுறமுமாக அவனைக் கைத்தாங்கலாக நடத்தி வந்தன. 


தெரு ஓரம். அதே யாசகன். அதே பிச்சைத்தட்டு. அதே குரல். 


"சாமி! தர்மம் போடுங்க சாமி" 


"அட போப்பா, தரித்திரம், தரித்திரம். உம் மூஞ்சில முழிச்சாலே ஒரு எழவும் உருப்படாது. நாசமாப் போறவனே " கரித்துக்கொட்டினான் பாரதன். 


இப்போது வியப்பின் விளிம்பில் நின்று பேசினான் யாசகன். 


 "அட கஞ்சப் பிரபுவே! காசு இல்லைண்ணா இல்லைண்ணு சொல்லிட்டுப் போ. அதுக்கு ஏன் இப்படி ஒப்பாரி வைக்கணும்".

சற்று நேரத்தில் நிதானத்துக்கு வந்தான் பரதன்.


நேற்று கர்ணன் பிறந்ததும், இன்று கஞ்சன் பிறந்ததும் பாரதனின் அதே மனதில் தான். அப்படி தர்மத்தை அதர்மம் ஆக்கிய அந்த விந்தைக்கான காரணம் எது? அல்லது யார்? அந்த யாசகன் அறியமாட்டான். ஆனால் பரதன் நன்றாகவே அறிவான். 


பாளை. கணபதி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%