கோயம்பேட்டில் குவிந்த கரும்புகள்: ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை
Jan 12 2026
12
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சிறப்பு சந்தையில் கரும்பு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது.
ஜனவரி 15-ம் தேதி பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்னும் சில தினங்களே உள்ளதால், தேவையான பாரம்பரியப் பொருட்களை முன்கூட்டியே வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வெல்லம் போன்றவை பண்டிகையின் முக்கிய அடையாளங்களாக இருப்பதால், அவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில், கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து, இஞ்சி, வெல்லம் போன்ற பிற பொங்கல் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கோயம்பேடு அங்காடி நிர்வாகம் சார்பில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புச் சந்தைக்கு, மதுரை, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கரும்புகள் வந்து குவிந்துள்ளன. நேற்றைய கணக்கீட்டின்படி, 200 டன்னுக்கும் அதிகமான செங்கரும்புகள் சந்தைக்கு வந்து இறங்கியுள்ளன.
தொடர்ந்து மேலும் பல லாரிகளில் கரும்புகள் வந்த வண்ணம் உள்ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, கரும்பின் தரத்தைப் பொறுத்து ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருசிலர் ஒரு கட்டு ரூ.800 வரையிலும் விற்பனை செய்தனர்.
பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க, கரும்புகளின் வருகையும் தேவையும் இன்னும் அதிகரிக்கும் என்பதால், வரும் நாட்களில் வியாபாரம் களைகட்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?