கொரோனா தடுப்பூசிகளை 150 நாடுகளுக்கு அனுப்பியது இந்தியா; இலக்கிய நிறைவு விழாவில் கவர்னர் ரவி பெருமிதம்

கொரோனா தடுப்பூசிகளை 150 நாடுகளுக்கு அனுப்பியது இந்தியா; இலக்கிய நிறைவு விழாவில் கவர்னர் ரவி பெருமிதம்




வானுார்; 'இந்தியா 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி, நாம் அனைவரும் ஒன்றே என்பதை நிரூபித்துள்ளது' என கவர்னர் ரவி பேசினார்.



சர்வதேச நகரமான ஆரோவில்லில் மார்கழி மாதத்தையொட்டி, இலக்கிய விழா கடந்த 15ம் தேதி துவங்கி, பல்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவுகள் நடந்து வந்தது. நிறைவு விழா நேற்று நடந்தது.



விழாவிற்கு அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி தலைமை தாங்கினார். சிறப்பு அலுவலர் சீத்தராமன் வரவேற்றார். அறக்கட்டளை உறுப்பினர்கள் அரவிந்த் நீலகண்டன், கவுதம் கோஷால் முன்னிலை வகித்தனர்.



விழாவில் சிறப்பு விருந்தினர் அறக்கட்டளை தலைவர், தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:



மனித மையக் காலத்திற்கு பிந்தைய உலகிற்கு ஆரோவில் ஒரு தீர்வை வழங்குகிறது. ஆரோவில் என்பது ஒரு புனித யாத்திரை. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல. அது வேத தத்துவத்தில் வேரூன்றிய பாரத சக்தியாகும் ஆகும்.



நவீன பாரதம் வெறும் வாழ்வாதாரத்தைத் தக்க வைக்கும் நிலையிலிருந்து மறுமலர்ச்சி நிலைக்கு மாறி உள்ளது. இதற்கு உதாரணமாக மற்ற நாடுகள் கொரோனா தடுப்பூசிகளைத் தேக்கி வைத்தபோது, இந்தியா 150 நாடுகளுக்கு தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் 'நாம் அனைவரும் ஒன்றே' என்பதை நிரூபித்தது.



ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தைச் சேர்க்க இந்தியா எடுத்த முயற்சி, உலகின் எந்தப் பகுதியையும் ஒதுக்கி வைக்கக்கூடாது என்பதற்கான சான்று. உலக மோதல்களில் வெறும் பார்வையாளராக இல்லாமல், அமைதிக்காக உரையாடல்களை ஊக்குவிக்கும் நிலையை இந்தியா எடுத்துள்ளது. அரவிந்தரின் கனவுகளை நிறைவேற்ற இந்தியா தன் அடிப்படை ஆன்மிக விழுமியங்களில் உறுதியாக இருக்க வேண்டும்.



பிரிவினைகளைக் கடந்து ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்வதே உண்மையான சுதந்திரம். அனைவரும் காலத்தின் இதயத்துடிப்பாக செயல்பட வேண்டும். இலக்கியம் இந்த மறுமலர்ச்சியிலிருந்து தனித்து இருக்க முடியாது.



இந்தியா பாரதம் தனக்காக மட்டும் பிறக்கவில்லை. ஒட்டுமொத்தப் படைப்பின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் படைப்பாற்றலின் ஊடகமாக எழுத்தாளர்கள் திகழ வேண்டும்.



இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%