கொடுவா மீன், நண்டு, சிப்பி அறுவடை விழா: கலெக்டர் இளம்பகவத் துவக்கி வைத்து பார்வையிட்டார்
தூத்துக்குடி. ஜூலை. 17.
மக்களின் தேவைக்கேற்ப நாம் மீன்களை வளர்த்து தரமாக விற்பனை செய்கின்ற பொழுது வணிகம் மேம்பாடு அடைவதற்கும் தொடர்ந்து மீன்களை வாங்குபவர்கள் தொடர்பில் இருப்பதற்கான நிலை ஏற்படும் என்று மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்திற்குட்பட்ட சிப்பிகுளம் பகுதியில், நபார்டு வங்கி உதவியுடன் தூத்துக்குடி மண்டல நிலையம், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் சார்பாக நடைபெற்ற கொடுவா மீன், நண்டு மற்றும் சிப்பி அறுவடை விழாவினை மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது : –
கொடுவா மீன், நண்டு மற்றும் சிப்பி அறுவடை விழாவானது நபார்டு வங்கியின் உதவியுடன் இன்றையதினம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூண்டு மீன் வளர்ப்பு (Cage culture) முறை குறித்து மீன்வளத்துறை சார்பாக நடத்தப்படுகிற ஆய்வு கூட்டத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூண்டு மீன் வளர்ப்பு (Cage culture) முறையை மேம்படுத்துவதற்காகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இம்முறையில் மீன்களுக்கான உணவுகள், தொழில்நுட்பம் தெரிந்த மீனவர்கள் என்ற சவால்களை எதிர்கொள்கின்ற நிலை ஏற்படும். எனவே, தற்பொழுது 48 நபர்களுக்கு கூண்டு மீன் வளர்ப்புக்காக வழங்கப்படுகிறது. பொதுவாக கடல் என்பது மிகபரந்த பரப்பாகும். அதில் கூண்டு (Cage) எடுப்பது என்பது சிறிய அளவு தான். மேலும் அதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதற்கான முதலீடாக ரூ. 2.இலட்சத்திலிருந்து ரூ. 3 இலட்சம் வரை மீன்களுக்கான பராமரிப்பு உள்ளிட்டவை தேவைப்படும்.
இம்முயற்சியில் ஈடுபடுகிற விருப்பமுள்ள மீனவர்களுக்கு வங்கியின் மூலம் கடனுதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை முன்னோடி மீனவர்களுடன் இணைந்து கற்றுக் கொள்ள வேண்டும். இயல்பாக மீன்வளர்ப்பதன் மூலம் உள்ள சாதகமான மற்றும் பாதகமான சூழ்நிலையினை தெரிந்து வைத்திருப்பார்கள். எனவே, அவர்களிடம் அதுகுறித்த கருத்துக்களை பகிர்கின்ற பொழுதுதான் மற்ற மீனவர்களும் இதில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
எப்பொழுதும் இயல்பாக நாம் ஒரே மாதிரி சிந்திக்கின்ற பொழுது வளர்ச்சி என்பது இருக்காது. கடலுக்கு சென்று மீன் பிடிப்பது என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு கடலுக்கு சென்று மீன் பிடித்தல் என்பது மேம்பாடு அடைந்துள்ளது. கடலில் மீன் பிடித்தல் என்பது என்ன மீன் கிடைக்கும்? எவ்வளவு மீன் கிடைக்கும்? என்பது ஒரு நிச்சயமற்ற தன்மை ஆகும். மேலும் சில நாட்கள் அதிகளவில் மீன் கிடைக்கும், சில நாட்கள் குறைந்த அளவில் மீன் கிடைக்கும், சில நாட்கள் மக்கள் விரும்பாத மீன் கிடைக்கும். இதுபோன்று பல சுழ்நிலைகள் உள்ளன. ஆனால் கூண்டு மீன் வளர்ப்பு (Cage culture) முறையின் மூலம் நாம் என்ன மீன் வளர்க்க போகிறோம் என்பதை முடிவெடுக்கலாம். எந்த மீன் தேவை இருக்கிறது என்பதை சரியாக தேர்ந்தெடுத்து வளர்க்கலாம். எவ்வளவு எடை வளர்ந்து இருக்கிறது மற்றும் எவ்வளவு எடை வளர்க்க வேண்டும் என்பதையும் நாம் கண்காணிக்கலாம். இம்முறை மூலம் சந்தைபடுத்துதலுக்கு ஏற்ற வகையிலான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. உள்நாட்டு மீனவர்கள் குளம் வெட்டி மீன் வளர்க்கின்ற முறையில் நாளுக்கு ஏற்றவாறு இதுபோன்று மீன்களை விற்பனை செய்கின்றனர்.
மக்களின் தேவைக்கேற்ப நாம் மீன்களை வளர்த்து தரமாக விற்பனை செய்கின்ற பொழுது வணிகம் மேம்பாடு அடைவதற்கும் தொடர்ந்து மீன்களை வாங்குபவர்கள் தொடர்பில் இருப்பதற்கான நிலை ஏற்படும். மீன்களை பொறுத்தவரையில் நமது சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நாம் விரும்புகின்ற மீன்களின் வகை கிடைக்கும் என்பது சாத்தியமற்றது. ஆனால் இதுபோன்ற சுழ்நிலையில் கூண்டு மீன் வளர்ப்பு (Cage culture) முறை என்பது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மேலும், இங்கு மீன்கள் மட்டுமல்லாது நண்டுகளையும் வளர்க்கின்றனர். இதுபோன்று புதுமையான செயல்களை செய்கின்ற பொழுது அதன்மூலம் கிடைக்கின்ற வருமானம் என்பது இயல்பான கடல் தொழில் வருமானத்தை விட நிலையானதாகவும் கூடுதலாகவும் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கடலிற்கு சென்று நேரடியாக கிடைக்கின்ற வருமானத்தை விட இதுபோன்ற முறையில் மீன் வளர்ப்பதன் மூலம் கிடைக்கின்ற வருமானம் அதிகமாக கிடைக்கும். விவசாயத்தை பொறுத்தவரையில் விவசாயத்தை காட்டிலும் ஆடு, மாடுகள் வளர்த்து அதன்மூலம் கிடைக்கின்ற வருமானம் அதிகளவில் இருக்கும். எனவே, கூண்டு மீன் வளர்ப்பு (Cage culture) முறை என்பது மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும். இம்முறையிலான மீன் வளர்ப்பை மென்மேலும் மேம்படுத்துவதற்காக நிதியுதவி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். எனவே, இம்முறையிலான மீன்வளர்ப்பை அனைவரும் அறிந்து, தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், தூத்துக்குடி (மண்டலம்) உதவி இயக்குநர் கு.அ.புஷ்ரா ஷப்னம், மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளர் (பொ) லவ்சன் எட்வர்டு, மீனவர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.