கைக்குட்டை ரகசியம்

கைக்குட்டை ரகசியம்


திருவிழா கல கலப்பில்

சல சலப்பில் 

திணறித் திக்கு முக்காடிப் போயிருந்த 

அந்தத் திருமண வீடு

தவ அமைதிக்குத் 

திரும்பி யிருந்தது...

புதுமணத் தம்பதியர் 

இருவரும் இன்னும் 

பத்து நாளில் 

விவேக ஞானியாம்

விவேகானந்தனுக்கு

வெற்றித் திலகமிட்ட

சிறப்பு நகரமாம்

சிகாகோவுக்கு 

சிறகடித்துப் பறக்க வேண்டும்...

பெரிய குடும்பத்துப் பெண்...

பேரழகி.. பெரும் பதவி 

பெரும் சம்பளம் என்று 

புது மனைவிக்குப்

பெருமைகள் பல இருந்தும்

மாப்பிள்ளை முகத்தில் மட்டும் ஈயாடாத 

இருள் சோகம்...

யாரிடமும் எடுத்துச் சொல்லி ஆறுதல் 

உணர முடியாத 

உரத்தக் குழப்ப உள் சோகம்...

காரணம் இது தான்...

காரணமே இல்லாமல் 

அடிக்கடி அவள் 

கைக்குட்டையால் 

மூக்கைப் பொத்தி 

முகம் மாறுகிறாள்...

இந்த இருவாரமாய் 

இதைப் பார்த்து பார்த்து 

இதயம் கலங்கித் தான் 

போனான் அவன்...

அப்பா --அம்மா என்ன 

அனைவரின் முன்னாலும் 

அப்படித் தான் 

கைக்குட்டையால்

மூக்கு பொத்திப் பொத்தி 

அவர்கள் மூளையைக் 

கசக்க வைத்தாள்.

காரணமும் புரியாது 

அவனும் இதயம் 

கலங்கித் தான் போனான்....

மனம் விட்டு கேட்கவும் 

தன்மானம் தடுக்கிறது 

தராசில் நிறுத்திப் பார்த்தால் தகுதிகள் 

அவளுக்குத் தான் அதிகம் என்பதால் 

அடக்கி வாசிப்ப்பது 

அவசியமாகிப் போனது அவனுக்கு..

தொடக்கத்தில் 

கைக்குட்டையால் அவள் 

மூக்கை மறைக்கும் போது 

குற்ற உணர்ச்சி 

எதுவும் இல்லாத 

குறுகறுப்பு மட்டுந்தான் 

மனதுக்குள் 

கும்மாளம் போட்டது.

போகப் போகத்தான் 

குறுகுறுப்பு மறைந்து 

வெளிக்காட்ட முடியாத 

கோபம் கொப்பளித்து

சகல சந்தேகங்களும்

சகட்டு மேனிக்கு 

விஸ்வரூபம் எடுத்து 

வேதனைக் கடலில் 

தள்ளி விட்டது.. மனத்தைத் தாறுமாறாய் தடம் புரள வைத்துத் தளரவும் வைத்தது

ஆணின் பொறுமைக்கு 

அளவு உண்டு தானே?

அன்று..

பெற்றோர் யாரும் 

வீட்டில் இல்லாத 

விரும்பிய தருணம் அது...

அவளும் முகம் 

பொத்தாத மூடில்

முகம் மலர்ந்து இருந்தாள்...

இது தான் நேரமென்று 

பரிட்சையில் பயமின்றி

இறங்கி விட்டான்...

பாசாங்கு பண்ணாது

பளிச்சென்றும் கேள்வி 

கேட்டு விட்டான்...

இதற்காகவே 

காத்திருந்த மாதிரி 

கனிவுடனே வாய் திறந்தாள்...


'இத்தனை நாள் 

அமைதியாய் நான் நடத்திய அகிம்சை 

போராட்டத்துக்கு 

எதுவுமே பேசாமல் 

பொறுமை காத்த 

உங்கள் பண்புக்கு நன்றி என்றாள்...

ஆனந்த அதிர்வில் 

அதிர்ச்சி ஆனான் அவன்..

அவளோ தொடர்ந்தாள்...

உங்கள் வீட்டில் --

பண்ணையில் 

உழைக்கும் மனிதரை

யெல்லாம் 

ஈரமே இல்லாமல் 

இழிவாய் நடத்துவதை 

என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இதைத்

தீர்மானித்துத் திட்டமிட்டேன்..

என் எதிர்ப்பை 

நேரடியாய் காட்டினால் 

நாகரீகம் தொலைந்து போகும்... அதனால் தான் இந்த 

அறவழிப் போராட்டம்...

வேலையாட்களை 

மனிதமே இல்லாமல் 

அதட்டி மிரட்டி 

வேலை வாங்கும் போதெல்லாம் 

நாற்றமடித்து கெட்ட வாசனை அடிக்கிற

பாவனையில் 

கைக்குட்டையால் 

மூக்கைப் பொத்திப் 

பொத்தி உங்களை யெல்லாம் 

குழப்பத்தில் ஆழ்த்தி

திக்கு முக்காட வைத்தேன்...

மன்னித்துக் கொள்ளுங்கள்...

நல்ல நோக்கத்திற்காக

நாகரீக நாடகம்..

இதைப் புரிந்து கொண்டு 

இனி மேலாவது 

இங்கு வேலை பார்க்கும் மனிதரை

இதய சுத்தியோடு 

இதமாக நடத்துங்கள்...'

தலை தாழ்த்தி வேண்டினாள்...

தகுதியானவளைத் 

தாரமாய் பெற்றிட்ட 

பெருமையில் 

தலை நிமிர்ந்தான் அவன்!



நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%