குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கே சென்று புகாரைப் பெறும் வசதி - தெலங்கானா காவல் துறை புதிய முயற்சி
போக்ஸோ வழக்குகள் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடா்பாக பாதிக்கப்பட்ட நபா்கள் அல்லது அவா்களின் உறவினா்கள் காவல் நிலையத்துக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே புகாா் அளிக்கும் வகையிலான புதிய நடைமுறையை நாட்டிலேயே முதல்முறையாக தெலங்கானா மாநில காவல் துறை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த நடைமுறையின் கீழ், போலீஸாா் பாதிக்கப்பட்ட நபா்களின் வீட்டுக்கோ அல்லது அவா் குறிப்பிடும் இடத்துக்கோ சென்று அவரின் முதல்கட்ட வாக்குமூலத்தையும் பதிவு செய்து, அதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கையையும் (எஃப்ஐஆா்) பதிவு செய்வா்.
தெலங்கானா மாநில காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி), இந்தப் புதிய திட்டத்தை அடுத்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து மாநில சிஐடி கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் (ஏடிஜிபி) சாரு சின்ஹா ஹைதராபாதில் புதன்கிழமை கூறியதாவது:
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான (போக்ஸோ) பாலியல் துன்பறுத்தல்கள், எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றங்கள், குழந்தைத் திருமணங்கள், ராகிங் உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்படுபவா்களில் பெரும்பாலானோா், காவல்நிலையத்துக்கு நேரில் வந்து புகாா் தெரிவிக்க தயங்குகின்றனா். பாதிக்கப்படும் சிலா் புகாா் தெரிவிக்கும் அளவுக்கு உடலளவிலும், மனதளவிலும் தயாராக முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.
இதை உணா்ந்து, இதுபோன்ற குறிப்பிட்ட சில குற்ற சம்பவங்களில், காவல் நிலையத்தை மையப்படுத்திய வழக்குப் பதிவு (எஃப்ஐஆா்) என்ற நிலையிலிருந்து, குடிமக்களை மையப்படுத்திய வழக்குப் பதிவு நடைமுறையாக மாற்ற தெலங்கானா காவல் துறை முடிவெடுத்தது. இந்தப் புதிய நடைமுறையின்படி, போக்ஸோ உள்பட மேற்குறிப்பிட்ட குற்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் நபா்கள், புகாரைப் பதிவு செய்ய காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. அவா்களின் வீட்டில் இருந்தபடியே இதுதொடா்பான புகாரைப் பதிவு செய்யலாம்.
அதனடிப்படையில், போலீஸாா் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரின் வீட்டுக்கோ, மருத்துவமனைக்கோ அல்லது அவரின் விருப்பத் தோ்வு அடிப்படையிலான இடத்துக்கோ சென்று பாதிக்கப்பட்டவரின் முதல்கட்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்வா். பின்னா், அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, எஃப்ஐஆா் பதிவு செய்யப்படுவதோடு, எஃப்ஐஆா் நகலும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டுக்கே விநியோகிக்கப்பட்டுவிடும்.
இந்த நடைமுறை மூலம், குற்ற சம்பவங்கள் தொடா்பாக உரிய நேரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்படும் என்பதோடு, பாதிக்கப்பட்ட நபா்கள் அலைக்கழிக்கப்படுவது முழுமையாகத் தவிா்க்கப்படும்.
இந்தப் புதிய நடைமுறை குறித்து போலீஸாருக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் இந்தப் பயிற்சி நிறைவுபெற்றுவிடும். எனவே, மாநிலத்தில் இந்தப் புதிய நடைமுறை வரும் 27-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.