இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 4-வது ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி
இலங்கைக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி சாதனை ரன் குவிப்போடு வெற்றி பெற்றது.
இந்தியா- இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. நடப்பு தொடரில் முதல்முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் சமாரி அட்டப்பட்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய மந்தனா அதிரடியாக மட்டையை சுழட்டினார்.
ஷபாலி 30 பந்தில் 50 ரன்களை கடந்தார். அவர் தொடர்ச்சியாக அடித்த 3-வது அரைசதம் இதுவாகும். மந்தனா 35 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ரன்ரேட்டை 10-க்கு மேலாக நகர்த்திய இவர்கள் ஸ்கோர் 162-ஐ (15.2 ஓவர்) எட்டிய போது பிரிந்தனர். ஷபாலி வர்மா 79 ரன்களில் (46 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் மந்தனா 80 ரன்களில் (48 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. பெண்கள் 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் மெகா ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ரிச்சா கோஷ் 40 ரன்களுடனும் (16 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 16 ரன்னுடனும் (10 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
பின்னர் இமாலய நோக்கி இலங்கை ஆடிய இலங்கை வீராங்கனைகள் முடிந்த அளவுக்கு வேகமாக பேட்டிங் செய்தனர். கடந்த 3 ஆட்டங்களில் 130 ரன்களை கூட தாண்டாத அவர்கள் இந்த ஆட்டத்தில் 200 ரன்களை நெருங்கி ஆச்சரியப்படுத்தினர். 20 ஓவர்களில் அவர்கள் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் போட்டியில் இலங்கையின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேப்டன் சமாரி அட்டப்பட்டு 52 ரன்களும் (37 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஹாசினி பெரேரா 33 ரன்களும் (20 பந்து, 7 பவுண்டரி) விளாசினர். இந்திய தரப்பில் அருந்ததி ரெட்டி, வைஷ்ணவி ஷர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக முதல் 3 ஆட்டங்களிலும் இந்தியா எளிதில் வென்றிருந்தது.