இப்படியும் சில ஜென்மங்கள்

இப்படியும் சில ஜென்மங்கள்


(ஒரு பக்கக் கதை).


வாசலில் குரல் கேட்க எழுந்து சென்று பார்த்தேன். நாலைந்து வீடு தள்ளிக் குடி இருக்கும் கிழவி நின்றிருந்தாள். அவள் கைகளில் ஒரு பாலிதீன் கவர். அதில் நிறைய கொய்யா பழங்கள்.


  "எங்க வீட்டு மரத்துல காய்ச்சது தம்பி... நல்லா சுவையா இருக்கும் வாங்கிக்கங்க தம்பி" நீட்டினாள்.


  வீட்டுக்குள்ளே இருந்து வேக வேகமாய் வந்த என் மனைவி கோகிலா, "வேண்டாம் கிழவி" என்றதும், நான் "அட... பரவாயில்லை வாங்கிக்கலாம்!" என்றேன்.


  "வேண்டாங்க... கிழவி கீழே...டிச்சுக்குள்ளார விழற பழங்களைக் கழுவிக் கொண்டு வந்து தர்றா"


   கிழவியை பார்க்கப் பரிதாபமாய் இருந்ததால் நான் கோகிலாவின் பேச்சையும் மீறி அந்தப் பழங்களை வாங்கினேன்.


  "நூறு ரூபா குடுங்க தம்பி."


  "என்னது நாலு பழத்துக்கு 100 ரூபாயா?" நான் கேட்க.


  "அது செரி... உங்க நூறு ரூபாயை வாங்கித்தான் நான் கோட்டை கட்டப் போறேன்!.. சீக்கிரம் குடுங்க தம்பி!" என்று அவள் கத்தலாய் கேட்க, வேறு வழியில்லாமல் கொடுத்தனுப்பினேன்.


   மூன்று நாட்களுக்குப் பிறகு, கிழவி தெருவில் மயக்கம் போட்டு விழுந்து கிடக்க, யாருமே அவளைக் கண்டு கொள்ளவில்லை. 


    பதறிப் போய் கோகிலாவிடம் கேட்டேன். "பாவமாயிருக்குடி... நான் போய் உதவட்டுமா?"


  "வேண்டாம்ங்க... உங்களுக்கு அந்தக் கிழவியை பற்றி தெரியாது... இத்தனை பேர் பார்த்தும் பார்க்காமப் போறாங்கன்னா காரணம்... அவளை பத்தி தெரிஞ்சதுனால அப்படி போறாங்க!.. உதவின்னு போயிட்டீங்க அவ்வளவுதான்... மொத்த செலவும் உங்க தலையில கட்டிடுவா".


  கிழவி மண்ணில் கிடந்ததைப் பார்த்து மனம் தாளாமல் நானே ஒரு ஆட்டோவைப் பிடித்து, அவளை அதில் ஏற்றி, பக்கத்துக் கிளினிக் அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.


 ஆயிரம் ரூபாய் மருந்து மாத்திரை செலவையும், 500 ரூபாய் மருத்துவர் ஃபீஸையும் நானே கொடுத்தேன். பின்னர் அவளை வேறொரு ஆட்டோவில் திரும்ப அழைத்து வந்து வீட்டிலும் சேர்த்தேன். 


   போதாக்குறைக்கு நிறைய ஆப்பிளும் ஆரஞ்சும், கைச்செலவிற்கு கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன்.


    என்னிடம் எல்லாத்தையும் விசாரித்து விட்டு தலையில் அடித்துக் கொண்டு சொன்னாள் கோகிலா.


 "தர்மம் செய்யலாம் ஆனா பாத்திரம் அறிந்துதான் தர்மம் செய்யணும்"


   ஒரு வாரத்திற்குப் பிறகு, வாசலில் கிழவியின் குரல். சென்று பார்த்தேன்.


 இரண்டு பாலிதீன் பைகளில் நிறைவே கொய்யா பழங்கள்.


  "இந்தாங்க தம்பி உங்களுக்குத்தான்" நீட்டினாள்.


  புன்னகையோடு வாங்கிக் கொண்டேன்.


   "போன வாரம் நான் ரோட்ல மயங்கிக் கிடந்தப்ப நீங்கதான் ஆட்டோவுல ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனீங்க... மருத்துவச் செலவு எல்லாம் பாத்துக்கிட்டீங்க... ரொம்ப நன்றி தம்பி" கையெடுத்துக் கும்பிட்டு சொன்னாள்.


   "அடடே... இதுல என்ன இருக்கு?.. மனுஷனுக்கு மனுஷன் செய்யற உதவிதானே?" சொல்லி விட்டு வீட்டிற்குள் திரும்பிய என்னை நிறுத்தினாள் கிழவி.


   நின்று, திரும்பிப் பார்த்தேன்.


   "ரெண்டு பை பழத்துக்கு 200 ரூபாய் கொடுங்க தம்பி" என்றாள் கிழவி.


   அதிர்ந்து போன நான் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு அவசர அவசரமாக வீட்டிற்குள் திரும்பினேன்.


   என் வாய் என்னையும் அறியாமல் முணுமுணுத்தது. "ஹும்... இப்படியும் சில ஜென்மங்கள்!"


(முற்றும்)


முகில் தினகரன்,

 கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%