-பாவலர் கருமலைத்தமிழாழன்
வருங்காலத் தூண்களெல்லாம்
வரிசையாக வந்துநிற்க
வருமானம் மதுக்கடையில்
வாருதுநம் அரசாங்கம் !
தெருமுனையில் பெயர்பலகை
தெருவிலிரு மதுக்கடைகள்
வருகவருக வென்றழைத்தே
வழங்குதுதீ நஞ்சுதன்னை !
கூச்சமின்றி மதுவிற்றுக்
குடும்பத்தை நடுத்தெருவில்
பேச்சின்றித் தவிக்கவைத்துப்
பேரழிவைச் செய்கிறது !
நாசம்தான் வருமென்று
நன்றாகத் தெரிந்திருந்தும்
மோசம்தான் போகின்றார்
மௌனமாக சமூதாயம் !
எரிக்கின்ற நெருப்பென்றே
எல்லோரும் அறிந்திருந்தும்
புரிகின்றார் அதையெடுத்துப்
புசிக்கின்றார் நாள்தோறும் !
பறித்துவிடும் உயிரென்று
பட்டையாக எழுதிவைத்தும்
குறிப்புரையாய் அதைப்படித்துக்
குடிக்கின்றார் மனமுவந்தே !
மதிகெடுக்கும் அரக்கிதனை
மாரதியாய்க் காதலித்தே
சதியென்று அறியாமல்
சாகின்றார் பேதலித்தே !
சுதிசேர்க்கும் தாளமென்று
சுர்ரென்றே ஏறவைத்து
விதிமுடிவைத் தானழைத்து
விரைந்தாவி விடுகின்றார் !
மதுக்கோப்பை தனையேந்தி
மாப்புகழைத் தருகின்ற
புதுக்கோப்பை வெற்றிகளைப்
புறந்தள்ளி மிதக்கின்றார் !
வதுவைசெய்து மகிழ்வித்த
வனிதையரை விதவையாக்கி
எதுவொன்றைச் சாம்பலாக்கும்
எரிகுழம்பில் மாய்கின்றார் !
சாராய விற்பனையில்
சாதனையாம் எனவுரைத்தல்
சோரம்போன நாடதனின்
சொல்லொன்னா அவமானம் !
ஊராளும் அரசாங்கம்
உயர்பறிக்கும் எமனானால்
யாராளும் ஏற்கியலா
ஆர்த்தெழுவோம் மூடுதற்கே !
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?