ஆன்லைன் முதலீட்டு வர்த்தக மோசடி: கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் திருச்சியில் கைது
Dec 14 2025
131
சென்னை: ஆன்லைன் முதலீட்டு வர்த்தகம் என்ற பெயரில் மோசடி செய்யப்பட்ட ரூ.1.17 கோடி உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் மனோகரன் (58). இவர் சமூக வலைதள விளம்பரங்களை பார்த்து அதிக லாபம் ஈட்டும் ஆசையில், மோசடி நபர்கள் அறிவுறுத்தலின்படி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார்.
பின்னர் அவர்களின் தொடர் ஆலோசனைப்படி பங்குச் சந்தையிலும் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ரூ.1.17 கோடி செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு லாபம் மட்டும் அல்லாமல் முதலீடு செய்த பணம் கூட கிடைக்கவில்லை.
வேதனையடைந்த அவர் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் மனோகரனிடம் மோசடி செய்யப்பட்ட பணம் உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, ஏடிஎம் மூலம் குறிப்பிட்ட பணம் எடுக்கப்பட்டு கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த பிரவீன் (20), அதே மாவட்டத்தைச் சேர்ந்த சித்திக் பாஷா (26), பினோஜ் கான் (32) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் பிரவீன் கல்லூரி மாணவர் என்பதும் இவர் தனது வங்கிக் கணக்கை கமிஷனுக்காக சைபர் மோசடி கும்பலிடம் வழங்கியுள்ளார் என்பதும், சித்திக் பாஷா ஆட்டோ ஓட்டுநர் வேலை செய்துவருவதும், இவர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்காகப் பல
போலி வங்கிக் கணக்குகளைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்பதும், பினோஜ் கான் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதும், மோசடிப் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மோசடி மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து குற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 செல்போன்கள், 1 லேப்டாப், 1 டேப் மற்றும் வழக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?