🙏 ஈரோடு மாவட்டம் பாரியூர் என்னும் ஊரில் அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
🙏 ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கோபிச்செட்டிப்பாளையம் உள்ளது. கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள பாரியூர் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.
🙏 இத்திருக்கோயிலில் மூலவரான ஆதிநாராயணர், கருவறையில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கிழக்கு திசையை நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
🙏 இத்தலத்தில் உள்ள உற்சவர் தனி சன்னதியில் தெற்கு திசையை நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு அமாவாசை தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
🙏 மூலவரான ஆதிநாராயணரின் கோஷ்டச்சுவரில் வேணுகோபாலர், நாராயணர், வெங்கடாஜலபதி, நரசிம்மர், குருவாயூரப்பன் என திருமாலின் திருவுருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
🙏 பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
🙏 முன்மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து காட்சியளிப்பது சிறப்பு.
🙏 இத்திருத்தலத்தில் உள்ள சுவாமியை அதிகாலை வேளையில் தேவர்களும், சூரியனும் வழிபடுவதாக ஐதீகம். எனவே, இத்திருக்கோயிலானது தினமும் சூரிய உதயத்திற்கு பின்பு தான் திறக்கப்படுகிறது.
🙏 இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறார்.
🙏 இவரது வால் இரண்டு கால்களுக்கு நடுவில் மணியுடன் காணப்படுகிறது.
🙏 பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடியும், வால் தரிசனமும் விசேஷம் என்பார்கள். இத்தலத்தில் இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது மிகச்சிறப்பு.
🙏 புரட்டாசி சனிக்கிழமைகள், பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
🙏 அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயிலில் அனைத்து விதமான பிரார்த்தனைகளும் செய்யப்படுகிறது.
🙏 இத்திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
Thanks and regards
A s Govinda rajan
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்...!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநல்லூர் என்னும் ஊரில் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 93 கி.மீ தொலைவில் திருநல்லூர் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம். இப்படி ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால், இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
அம்மன் திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். இது தவிர 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், காசி விஸ்வநாதர், அகத்தியர், கணநாதர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
எட்டு கைகளுடன் கூடிய காளி இங்கு அருள்புரிகிறாள்.
இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம், பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும், காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார்.
மாசி மகத்திற்காக கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இத்தலத்தின் குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம்.
இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி திருவாரூர் தியாகராஜருக்கு ஈடாக உள்ளது. மாசி மகத்தின் போது இவர் கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரமும், விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம்.
இக்கோயிலில் உள்ள வில்வ மரத்தை ஆதிமரம் என்கின்றனர். முதன் முதலாக தோன்றிய வில்வமரம் இது தான் என கூறப்படுகிறது.
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை போன்றவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக வளைகாப்பு நடத்தியும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
பிரார்த்தனை நிறைவேறியதும் சந்தனக்காப்பு, முடி காணிக்கை போன்ற நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
Thanks and regards
A s Govinda rajan
அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்...!!
திருநெல்வேலி மாவட்டம் காரையார் என்னும் ஊரில் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது.
திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் பாபநாசம் உள்ளது. பாபநாசத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. விழாக்காலங்கள் மற்றும் எல்லா அமாவாசைகளிலும் இக்கோயிலுக்கு பாபநாசத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் செல்லும்.
ஐயப்பனின் ஆறுபடை வீடுகளில் இந்த சொரிமுத்து அய்யனார் கோயிலும் ஒன்றாகும். சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது.
அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் உள்ள மூலவரான சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இக்கோயிலின் சுற்று வட்டாரங்களில் இருந்து சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலான இங்கு வந்து மாலை அணிவித்து செல்கின்றனர்.
மகாலிங்கம், சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்ம ராட்சஷி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகத்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடிமாடசாமி, மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் இத்திருக்கோயிலில் உள்ளனர்.
கோயில் வளாகத்தில் இலுப்பை மரம் இருக்கிறது. இந்த மரத்தில் பிரார்த்தனைக்காக கட்டும் மணிகளை, மரம் விழுங்கிவிடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன. எனவே இதை மணி விழுங்கி மரம் என்று சொல்கின்றனர்.
மரத்தின் கீழ் புறம் ஒரு விநாயகர் இருக்கிறார். இவர் இருபுறமும் இரண்டு யானைகளுடன் வித்தியாசமான அமைப்பில் அருள்பாலிக்கிறார்.
இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம் ஆகும்.
ஆடி, தை அமாவாசை, பங்குனி உத்திரம் போன்றவை இத்திருக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் உள்ள மூலவரான சாஸ்தாவை வேண்டிக்கொண்டால், கால்நடைகள் நோய்கள் இன்றி இருக்கும் என்பது நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் ஆடி அமாவாசையின் போது பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Thanks and regards
A s Govinda rajan
அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில்...!!
மயிலாடுதுறை மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இங்கு சுவாமி லிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 102வது தேவாரத்தலம் ஆகும்.
இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படும்.
இத்தல விநாயகர் அகத்திய விநாயகர் எனப்படுகிறார்.
இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. இங்கு நடராஜர் கௌரிதாண்டவ கோலத்தில் அருள்புரிகிறார்.
இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது.
பெரும்பாலான சிவாலயங்களில் கந்தசஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால் இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம்.
கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில், ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பது விசேஷமான அமைப்பு. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது.
பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னதி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை, 'அகத்திய சந்தன விநாயகர்" என்றும் அழைக்கிறார்கள்.
தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால், 'அபயாம்பிகை" என்று அம்பாள் அழைக்கப்படுகிறாள். இவள் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள். ஆடிப்பூர அம்பாள், வீரசக்தி வடிவமாக தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
வைகாசியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் துலா ஸ்நானம் விசேஷம், ஆடி கடைசி வெள்ளியில் லட்சதீபம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி விழாவில் சிவன், அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது.
செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுபவர்கள் காவிரியில் நீராடி சிவனை வழிபட்டு மனஅமைதி பெறலாம். இங்கு நடனம் பயில்பவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை நிறைவேறியதும் சிவன், அம்மனுக்கு புது வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
Thanks and regards
A s Govinda rajan
அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில்...!!
சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டி என்னும் ஊரில் அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
சிவகங்கையிலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் வைரவன்பட்டி அமைந்துள்ளது. வைரவன்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலை கொண்டு அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலின் மூலவராக வைரவன் (பைரவர்) சுவாமி உள்ளார். அவர் வளரொளிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
வைரவன் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய் வாகனத்துடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார்.
இத்தலத்திலுள்ள கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இரு கை கூப்பி வணங்கியபடி ராமர் காட்சி தருகிறார்.
அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயிலில் இறைவி வடிவுடை அம்பாள் ஆவார்.
இத்தலத்தில் உள்ள அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் அவை தீரும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் உள்ள விநாயகர் வளரொளி விநாயகர் ஆவார்.
இத்தலமானது சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத்தூணுடன் அமைந்துள்ளது.
அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயிலில் சண்டிகேஸ்வரர் சன்னதி ஒரே பாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளது.
சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
எதிரி பயமும், கிரக தோஷங்களும் நீங்க இத்திருக்கோயிலில் வேண்டிக் கொள்ளலாம்.
இத்திருக்கோயிலுக்கு வெளியே தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை
அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
Thanks and regards
A s Govinda rajan
: நீதி கதைகள்
புதிய தேயிலை
ஒரு ஊரில் சுந்தரம் என்ற ஒரு விற்பனை பிரதிநிதி இருந்தார். அவர் தன்னிடம் இருக்கும் புதிய தேயிலையை அனைத்துக் கடைகளிலும் விற்க வேண்டும் என்று மிகவும் கடுமையாக முயற்சி செய்து வந்தார். ஆனால் அவர் இருக்கும் பகுதியில் அவருடைய தேயிலை அவ்வளவு பிரபலமானதாக இல்லை.
இருப்பினும், சுந்தரத்தின் வற்புறுத்தலுக்காக ஒரு சிலர் அந்தத் தேயிலைப் பொட்டலங்களை வாங்கி தங்கள் கடையில் வைத்திருந்தனர். ஆனால் ஒரே ஒரு கடைக்காரர் மட்டும் தொடர்ந்து சுந்தரம் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவருடைய அந்த தேயிலையை வாங்க முடியாது என்று கூறி மறுத்து வந்தார்.
சுந்தரம் இவரை எப்படி நம்முடைய தேயிலையை வாங்க வைப்பது என்பது பற்றி யோசித்தார். ஒரு யோசனை வந்தது. உடனே தன் மகளை அழைத்து, அந்தக் கடைக்குச் சென்று அந்த தேயிலையின் பெயரைச் சொல்லி, இருக்கிறதா? என்று கேட்டு வாங்கி வரச் சொன்னார்.
இரண்டாவது நாள் வேறு ஒரு சிறுவன், மூன்றாவது நாள் வேறு ஒரு சிறுவன் என்று அந்தக் கடையை நோக்கி அனுப்பிக் கொண்டே இருந்தார். வேறு வழியின்றி அந்தக் கடைகாரரும், சுந்தரத்திடம் இருந்த அந்தத் தேயிலைப் பொட்டலங்களைத் தனது கடையில் வாங்கி வைக்கத் தொடங்கினார்.
அவருடைய கடையிலும் அந்தத் தேயிலைப் பொட்டலங்களை பார்த்த சிலர், புதிதாக இருக்கிறதே என்று அதை வாங்க முன் வந்தனர். தேயிலைப் பொட்டலங்கள் நன்றாக மக்கள் மத்தியில் விற்பனையானதால், சுந்தரமும், அந்தத் தேயிலையுடன் இலவசங்கள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து அந்தத் தேயிலையை மக்கள் மனதில் பதிய வைத்தார்.
நாளடைவில் அந்த தேயிலையில் தயாரிக்கும் தேநீர்தான் சுவையானது என்று பரவலாக மக்களுக்குத் தெரியத் தொடங்கியது. இரண்டே ஆண்டுகளில் போட்டிக்கான தேயிலைகளைப் பின்னுக்குத் தள்ளி புதிய தேயிலையை வெற்றி பெற வைத்தார்.
தத்துவம் :
ஒரு செயலை செய்யும்போது முதலில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்றாலும் அதை வெற்றி பெற வைப்பதற்கு இவரை மாதிரி யோசித்தால் நிச்சயம் முன்னேற்றம் அடைவீர்கள்.
Thanks and regards
A s Govinda rajan
புத்திசாலிப் பையன்
மூங்கில் மரங்களை வெட்டும் தொழிலாளி ஒருவர் மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக காட்டிற்கு செல்லும் போது, அவருடைய பத்து வயது பையனையும் உடன் அழைத்துச் சென்றார்.
பையன், தன் அப்பாவிடம் செல்லும் வழியெல்லாம் விடாமல் கேள்விகள் நிறைய கேட்டுக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
பிறகு மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். மூங்கில் வெட்டிக் கொண்டிருக்கும் போதும், பையன் மீண்டும் கேள்விகள் கேட்டான். அதற்கு நாம் பின்பு பேசிக் கொள்ளலாம் என்று கூறிக் கொண்டே மூங்கிலை வெட்டிக் கொண்டிருந்தார். அதன் பிறகு பையன் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அப்பாவிடம் கேள்விகள் கேட்டான். தந்தை அவனருகில் வந்து, அப்பாவுக்கு ஒரு உதவி செய்கிறாயா? என்று கேட்டார். அவனும் சரி செய்கிறேன் என்றான். மூங்கில் வெட்டும் மரத்திற்கு அருகில் அழைத்துச் சென்றார். நான் வெட்டிப் போடும் மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைக்கின்றாயா? என்று கேட்க, பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.
அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். அப்பா... அப்பா... என்றான் பையன். என்னடா? என்று பையனைப் பார்த்து கோபமாக கேட்டார். அப்பா இந்தக் காட்டாறு எங்கே போகுது? என்று கேட்டான். அதற்கு அவனுடைய அப்பா நம்ம வீட்டிற்குத்தான் என்று சொல்லிவிட்டு மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார்.
அதற்குப் பிறகு பையன் அப்பாவிடம் கேள்விகள் கேட்கவே இல்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு வா போகலாம் என்றார். பையனிடம், நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைத்திருக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு பையன், நீங்க வெட்டின மூங்கிலை எல்லாம் ஆற்றில் போட்டு விட்டேன். இந்நேரம் அது நம் வீட்டிற்கு போய் சேர்ந்திருக்கும் என்று பொறுமையாகப் பதில் சொன்னான்.
தத்துவம் :
ஆகையால், பெரியவர்கள், இளம் வயது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும்போது திருத்தமாகவும், சரியாகவும் சொல்ல வேண்டும்.
Thanks and regards
A s Govinda rajan
இந்த இரண்டு வழியில் நீங்க எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
ஆனந்த் என்ற இளைஞன் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு தாகம் ஏற்பட்டது. ஆனால், அது பாலைவனம் என்பதால் அருகில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போல ஒன்று அவன் கண்ணில் தென்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்றான்.
அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் இருந்த ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தது. அந்த ஜக்கிற்கு மேலே இருந்த ஒரு அட்டையில் 'ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்" என்று யாரோ எழுதி வைத்திருந்தார்கள்.
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது என்று ஆனந்த் யோசித்தான்.
தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒருவேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் 'தானே" காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்த பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
தத்துவம் :
உங்களுக்கு அவசர கட்டத்தில் தேவைப்படும் ஒன்று மற்றவர்களுக்கு உடனே தேவைப்படவில்லை என்றாலும், ஏதாவது ஒரு நாள் கண்டிப்பாக தேவைப்படும். ஆகவே, 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகிவிடும்.
Thanks and regards
A s Govinda rajan
மன்னிப்பு கேட்டாலும் இதை மட்டும் மறக்க முடியாது !!
பூஞ்சோலை என்ற பச்சை பசுமையான புல்வெளிகள் மிகுந்த கிராமத்தில் சிலம்பரசன் என்ற இளைஞன் தன் குடும்பத்தோடு வாழ்ந்துவந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான்.
அதை பெற்றுக்கொண்ட சிலம்பரசனிடம், அவனது நண்பன்.. நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்தச் சுவரில் அடி என்றான். இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறுநாள் 30 ஆணிகளையும், அதற்கு அடுத்த நாள் 25 ஆணிகளையும் அடித்து படிப்படியாக அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப்பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட நண்பன் அவனிடம் அடித்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னான். இளைஞனும், அப்படியே செய்தான். அதைப்பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.
என் நண்பனே... நீ, நான் சொன்னபடியே அனைத்து வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டுவிட்டன. ஆனால், ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளைப் பார். இந்தச் சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
என் நண்பனே... உண்மையைச் சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர உன்னைத் தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதைக் காது கொடுத்து கேட்பார்கள். நீ நல்ல நிலைக்கு வரும் போது உன்னைப் புகழ்வார்கள். அதையும் இதயப் பூர்வமாகச் செய்வார்கள். அதைத்தான் நான் இப்போது செய்தேன்.
தத்துவம் :
நாம் கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நாம் என்னதான், செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது.
Thanks and regards
A s Govinda rajan
யார் முட்டாள்?
ஆற்றங்கரை ஓரமாக வழிப்போக்கன் ஒருவன் வந்துகொண்டிருந்தான். அவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் தென்பட்டது.
வழிப்போக்கன் அதை வைரக்கல் என்றறியாமல், விலை போகுமா என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்.
அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், 20 ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.
ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்.
ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்.
இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.
ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, 'அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!" என்று திட்டினான்.
அதற்கு அவன், 'அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்" என்றான்.
இப்பொழுது யார் முட்டாள்? வழிபோக்கனா? வியாபாரியா? இல்லை இரண்டு பேருமேவா? ஒவ்வொருவருடைய பார்வைக்கும் ஒவ்வொரு விதமாக தெரியும்.
ஆனால் அதன் உண்மையான மதிப்பு சிலருக்கு தெரிந்தும் அதை வேறு ஒரு காரணத்திற்காக இழந்து விடுகிறார்கள்.
அந்த வியாபாரி போல, ஐந்து ரூபாய் அதிகமாக கொடுக்க விருப்பம் இல்லாமல் வைரத்தை இழந்து விட்டான்.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai