அயோத்தி ஹனுமன்கிரி துறவியைக் கொல்ல முயற்சி - உ.பி போலீஸ் விசாரணை

அயோத்தி ஹனுமன்கிரி துறவியைக் கொல்ல முயற்சி - உ.பி போலீஸ் விசாரணை


 

புதுடெல்லி: அயோத்தியின் ஹனுமன்கிரி கோயிலின் துறவியை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து உத்தரப் பிரதேச போலீஸார் விசாரிக்கின்றனர்.


ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் புகழ்பெற்ற ஹனுமன்கிரி கோயிலும் உள்ளது. இதன் ஒரு ஆசிரமம் கோவிந்த் நகரில் அமைந்துள்ளது. இதில் மகேஷ்தாஸ் எனும் சுவாமி மகேஷ் யோகி தங்கியுள்ளார்.


இதனுள் அதிகாலை 2:45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவரைக் கொல்லும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆசிரமத்தின் வளாகத்தில் அடையாளம் தெரியாத சில நபர்கள் நுழைந்து அவரது அறையின் பின்புற ஜன்னலை வெட்டியுள்ளனர். பிறகு அவரது அறையினுள் தீ பந்தத்தை எறிந்துவிட்டுத் தப்பி விட்டனர்.


இதனால் திடீரென பெட்ரோல் வாசனை வீசியதை உணர்ந்த மகேஷ் யோகி விழித்தெழுந்துள்ளார். பிறகு தீப்பிடித்தத் தகவலை போலீஸாருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.


சம்பவம் நடந்த நேரத்தில், மகேஷ் யோகி ஆசிரமத்தில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரது சீடர்கள் ஆசிரமத்தின் மற்றொரு பகுதியில் வசிக்கின்றனர்.


தகவல் கிடைத்ததும், காவல் துறை மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. அறையின் பின்புறத்தில் வெட்டப்பட்ட கிரில் மற்றும் பெட்ரோல் போன்ற வாசனையின் தடயங்களையும் போலீஸார் கண்டறிந்தனர்.


சிசிடிவி காட்சிகள், கைபேசி அழைப்பின் விவரங்கள் மற்றும் மின்னணு கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இது முன்விரோதம் காரணமாக செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%