எனது நெருங்கிய தோழி கான்பூரில் வசித்து வருகிறாள். பல வருடங்களாக எங்களை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தாள். இரண்டு மாதங்களுக்கு முன்னால் என் கணவரும் நானும் ஒரு வாரப் பயணமாக அங்கு சென்றோம்.
கான்பூர் மிக அழகான ஊர். போன அடுத்த நாள் முதல் ஊரை சுற்றி பார்க்க ஆரம்பித்தோம். அவ்வூரில் காண வேண்டிய அனைத்து சுற்றுலா தலங்களையும் ஒவ்வொன்றாக நிதானமாக பார்த்து வந்தோம்.
இதற்கிடையில் அங்குள்ள ஒரு ஹோட்டலில் நடந்த அவளது மகளின் நிச்சயதார்த்தத்திலும் கலந்துக் கொண்டு மகிழ்ந்தோம்.
பின்னர் நாங்கள் ஊர் திரும்புவதற்கு இரண்டு நாட்கள் முன் அவள் எங்களை ஒரு அதிசயக் கோயிலுக்கு அழைத்து சென்றாள்.
ஏன் அதிசயக் கோயில் என்கிறீர்களா…….
இங்கு நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத அதிசயம் ஒன்று இன்று வரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது என்ன என்று பார்ப்போமா……
ஒரு ஊரில் மழை வருமா வராதா என்பதை வானத்தை பார்த்துத்தான் தெரிந்துக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த கான்பூர் மட்டும் அதற்கு விதிவிலக்கு. ஏனென்றால் இந்த ஊர் மக்கள் மழை விவரம் அறிய வானத்தை பார்க்க மாட்டார்களாம். மாறாக அங்குள்ள இந்த கோயிலுக்கு சென்று தெரிந்துக் கொள்வார்கள். எப்படி என்று சொல்கிறேன் வாருங்கள்.
உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இந்த பகவான் ஜெகந்நாதர் கோயில் அமைந்திருக்கிறது. இது 1000 வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மேற்கூரையில் இருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது என்று கூறினார்கள்.
ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னே இந்த கோயிலின் உள்பகுதியில் மழை பெய்யத் தொடங்கி விடுமாம். அந்த ஏழு நாட்களும் கோயிலின் உள் பகுதியில் மழை நிற்பதே இல்லையாம். மழை பொழிந்து சொட்டும் நீரின் அளவை பொறுத்து அந்த வருடம் எவ்வளவு மழை பெய்யும் என்பதை கான்பூர் மக்கள் அறிந்துக் கொள்கின்றனர்.
ஆனால் வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் இக்கோயிலின் உள் பகுதி மழை நின்று விடுமாம். இது ஏன் என்று யாருக்கும் இன்று வரை தெரியவில்லை. அதே போல் இக்கோயிலினுள்ளே மழை பெய்ய தொடங்கிய ஏழு நாட்களில் பருவ மழை தொடங்கும் என்ற அவ்வூர் மக்களின் நம்பிக்கை பொய்யானதே இல்லையாம்.
இந்த அதிசயத்தின் காரணத்தை அறிய உலகின் பல்வேறு இடங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வநதபடி இருக்கின்றனர். ஆனால் யாராலும் இது வரை இந்த அதிசயத்தின் விடையை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
இக்கோயிலை சுற்றி இருக்கும் கிராம மக்கள் இந்த கோயிலின் உள் பகுதியில் சொட்டும் நீரின் அளவை வைத்து அந்த வருடம் என்ன பயிரிடலாம் என்று முடிவு செய்கின்றனர்.
அதே நேரம் இக்கோயில் ஜெகந்நாதருக்கு வருடா வருடம் சிறப்பு பூஜைகள் செய்து அதிக அளவில் நீர் சொட்ட வேண்டும், அதனால் தாங்கள் நன்றாக விவசாயம் செய்து செழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார்கள் என்று என் தோழி சொன்னாள்.
நீங்களும் நேரம் கிடைக்கும்போது போய் இந்த ஜெகந்நாதர் கோயிலை தரிசித்து வாருங்கள்.
-ரமா ஸ்ரீனிவாசன்