ஊருக்கு வெளியே, ஒரு சின்னக் கோயில். கூரை உடைந்து, சுவரெல்லாம் வெடித்து, சாமி சிலையே மண்ணோடு மண்ணாய்க் கலந்து சிதிலமாகிப் போயிருந்தது.
ஆனால், ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அங்கே ஒரு மண் விளக்கு தானாக எரியும்.
அதை யாரும் ஏற்ற மாட்டார்கள். அதே போல், அதை யாராலும் அணைக்கவும் முடியாது.
ஊருக்குள்ளே அதை "அழற விளக்கு”னு சொல்லுவாங்க.
“அதை கண்ணீர் விடும் விளக்கு!"ன்னும் சொல்லுவாங்க.
நகரத்திலிருந்து அந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் பள்ளி ஆசிரியர் செல்வம் அந்த விளக்கு குறித்த விபரங்களை நம்பவில்லை.
“எல்லாம் மனிதன் உருவாக்கி வைத்தூறு பயம்” என்று சொல்லி விட்டுச் சிரிப்பான்.
அன்று அமாவாசை. "எப்படியாவது இன்னிக்கு ராத்திரி அந்த விளக்கை அணைச்சு ஊர் மக்களின் மூட நம்பிக்கையைத் துடைக்கணும்" என்று
முடிவு செய்தான்.
இரவு, தனி ஆளாக அந்தக் கோயிலுக்குள் நுழையும் போது
காற்றே இல்லாத நிலையில் அந்த
விளக்கு ஆடிக் கொண்டிருந்தது.
“ஹும்... இந்தச் சின்ன விளக்குக்கா இத்தனை பயம்?” என்றபடியே வாயால் அதை ஊதினான்.
அது அணையவில்லை.
மறுபடியும்… பலமாக ஊதினான்.
அப்போது, எங்கோ தண்ணீர் சொட்டும் ஓசை.
மழையும் இல்லை, பனியும் இல்லை. மேலே கூரையும் இல்லை.
விளக்கின் வெளிச்சத்திலிருந்து அந்தச் சின்னச் சின்ன துளிகள்
தெறித்து விழுந்தன.
செல்வம் கையை நீட்டி அதை உள்ளங்கையில் பிடித்தான்.
அதே நேரம் ஒரு பெண் குரல். உடைந்த குரல். "அணைத்து விடாதே"
செல்வம் நாலாப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்தான்.
யாருமே இல்லை.
விளக்கின் ஒளிக்குள்ளே ஒரு முகம். கருகிப் போன கண்கள் இல்லாத முகம்.
"யார் நீ?" செல்வம் தைரியமாய்க் கேட்டான்.
“இந்த ஊர் பொய்க் குற்றம் சாட்டி... என்னை எரிச்சுது...நான் எரிஞ்சு போனதினால நான் நல்லவள் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வரலை… நீயாவது அதை வெளிப்படுத்து”
அந்த நொடியில் செல்வத்துக்கு எல்லாமே புரிந்தது.
பல வருடங்களுக்கு முன்னாடி
இந்தக் கோயில் வளாகத்துல
ஒரு பெண் ஊராலே பொய்க் குற்றம் சாட்டப்பட்டு... அவமானப்படுத்தப்பட்டு
உயிரோடே எரிக்கப்பட்டிருக்கா... அவளோட கண்ணீர்தான் இப்ப
மண் விளக்கா மாறியிருக்கு...."
செல்வத்திற்கு அந்த உண்மை தெரிந்த நிமிடத்தில் விளக்கு அணைந்தது.
அடுத்த நாள் காலை ஊரெங்கும் ஒரே பேச்சு. "நேத்து ராத்திரி கோயிலுக்குள்ளார எரியும் விளக்கு அணைஞ்சிடுச்சாம்”
ஆனால், அந்த இரவு முதல் செல்வத்தின் வீட்டில் ஒவ்வொரு அமாவாசையிலும் ஒரு மண் விளக்குத் தானாக எரிந்தது.
அதை அணைக்க முயன்றால்...
அது அழும்.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்.