விதிவலையில் புத்தர்

விதிவலையில் புத்தர்


மனிதகுல மேன்மைக்கென்றே வாழ்ந்த மேன்மக்கள் பலர் கீழமக்கள் பின்னிய விதிவலையில் சிக்கி அழிந்ததுதான் கொடூரமான வரலாறு காட்டும் வன்முறை சித்திரங்கள். குருதிக் காவியங்கள். மலர் மிசை ஏகியவன் மாணடி சேரவும், நிலமிசை நீடு வாழவும் வழி காட்டிய புத்த பிரானும் இத்தகைய விதிவலை ஒன்றில் சிக்கி மாண்டு போனார். ஆனால் அது வன்முறையற்ற ஒரு வித்தியாசமான விதிவலை. அது என்ன? 


ஒருமுறை புத்தர் குஷிநகருக்கு செல்லும் வழியில் பாவா என்னும் இடத்திலுள்ள மாந்தோப்பை அடைந்தார். அந்த மாந்தோப்பில் சுந்தா கம்மாரபுத்தா என்ற அன்பர் புத்தர் மீது கொண்ட அன்பின் மிகுதியால் அவருக்கு உணவு வழங்கினார். அது பன்றி இறைச்சியும், காளானும் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த உணவு பற்றிய தீர்க்கமான விளக்கம் இல்லை. அந்த உணவு சமஸ்கிருதத்தில் "பன்றியின் மகிழ்ச்சி" (Big's Delight) என்று பொருள்படும் "சுக்கமத்தவா" என்ற உணவாகும். அது பவுத்தத்தின் மஹாயான மரபில் சைவ உணவாகக் கருதப்படுவது. 


பக்தர் தனக்கு அன்புடன் படைத்துள்ள உணவைப் புறக்கணித்தால் அந்த அன்பரின் மனம் வருந்துமே என புத்தரின் கருணை மனம் நினைத்தது. எனவே அந்த உணவை அருந்தினார். பின்னர் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த உணவு அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் மிகவும் உடல் நலிவுற்றார். அவ்வுணவால் பிறர் பாதிக்கப்படாதிருக்க அதைப் புதைத்துவிடச் சொன்னார். உணவு அருந்திய 15 அல்லது 18 மணி நேரத்திற்குப் பிறகு, மாறுபாடான உணவு செய்த ஊறுபாடு காரணமாக புத்தர் குஷிநகரில் மரணமடைந்தார். 


அவரது மரணம் பரவலாக பேசுபொருளானது. உணவு ஒவ்வாமை (Food poison), கொலை, தவறான மருத்துவம் என பல்வேறு முரணான கருத்துக்கள் நிலவுகின்றன. மருத்துவர் மத்தானந்தோ பிக்கு என்பவர் மகாபரிநிப்பன்ன சத்தா என்ற நூலையும், மருத்துவப் பரிசோதனைத் தரவுகளையும் (medical diagnostic criteria) விரிவாக ஆராய்ந்து ஒரு முடிவை வெளியிட்டார். தெளிவான அவரது கருத்தே ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ள கருத்தாக இன்று விளங்குகிறது. 

அவர் "மீசென்டரிக் இன்பார்க்க்ஷன்" (Mesenteric Infarction) என்ற பாதிப்பும், புத்தர் உண்ட மிகை உணவும் புத்தரின் மரணத்திற்குக் காரணம் என்று அறிவித்தார். 


மீசென்டரிக் இன்பார்க்ஷன் எனும் இந்நோய் குடலிலுள்ள தமனிகளிலும், சிரைகளிலும் குருதி ஓட்டத்தை முற்றிலும் தடைசெய்து அதன் மூலம் திசுக்களின் சிதைவுக்கும், அழிவுக்கும் வழிவகுக்கும் ஒரு ஆபத்தான பாதிப்பாகும். இந்நோய் வயது முதிர்ந்தவர்களைத் தாக்குவது இயல்புதான் என்றும் அவர் தெரிவித்தார். புத்தர் விதிவலையில் சிக்கியது இப்படித்தான். புத்தர் காலமானபோது அவருக்கு வயது எண்பது. 


எது எப்படியோ, "பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் 

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" என்ற, 580 ஆம் குறளுக்கு விளக்கமாகிப் போனது புத்தரின் முடிவு. 


P. கணபதி

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%