news Breaking News
clock

வாலிபர் மீது கார் ஏற்றிய சம்பவம்: நெல்லை சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்

வாலிபர் மீது கார் ஏற்றிய சம்பவம்: நெல்லை சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்

நெல்லை, செப். 18–


வாலிபர் மீது கார் ஏற்றிய விவகாரம் தொடர்பாக நெல்லை சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.


நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது.இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.


அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார்.


உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார்.


அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு ‘‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’’ என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். சுமார்½கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்துச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறியது.


புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜை சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக அவரை ஆயுதமடைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News