லால்குடி நாராயணனின் 'ரெண்டு கால் டெரர்' என்ற சிறுகதையை படித்து முடித்ததும் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் மனதிற்குள் ஒருவரை ஒருவர் வெறுப்பதில் சளைத்தவர்கள் இல்லை என்பது புரிகிறது. நாடகமே வாழ்க்கை என்பது இதுதான் போலிருக்கிறது. இப்படி போலியாக அன்பு காட்டும் கணவன் மனைவிக்கு இந்த உலகத்தில் பஞ்சமேயில்லை என்பதும் உண்மைதான்!
'வெம்பி விழும் வீண்வம்பு' என்ற சசிகலா விஸ்வநாதனின் சிறுகதை, காலத்திற்கு தகுந்தாற்போல் பெரியவர்களும் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியது. இதைப்போன்ற சிந்திக்க வைக்கும் சிறுகதைகளை வெளியிடும் தமிழ்நாடு இ.பேப்பரை பாராட்டுவதில் பெருமிதப்படுகிறேன்.
சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்...' தொடர் ஒருவித சோகத்துடன் செல்கிறது. இலக்கியாவை பெண் பார்க்க வந்தவர்கள் பிடித்திருக்கு என்று சொல்லிவிட்டார்கள். இலக்கியாவும் அரைக்குறை மனதுடன் சரியென்று சொல்லிவிட்டார். இனி என்ன நடக்குமோயென்று இலக்கியாவை போலவே எனக்கும் கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.
'ஆடி மாதத்தின் சிறப்புக்கள்' என்ற ருக்மணி வெங்கட்ராமனின் கட்டுரை சிறப்பாக இருந்தது. ஆடி மாதத்தின் சிறப்புகளை ஆன்மிக அழகுடன் அவர் சொல்லியிருந்த விதம் மனதைக் கவர்ந்தது.
வே.கல்யாண்குமாரின் 'காக்காப் பாட்டு.!' என்ற கவிதையில் காக்காவை பற்றிய எல்லா விபரங்களும் சொல்லியிருந்த விதம் சுவாரஷ்யமாக இருந்தது. கடைசியில் மறக்காமல் காக்காப் பிடிக்கும் மனிதர்களை பற்றியும் சொல்லியிருந்தது பாராட்டும்படி இருந்தது. இன்னொரு விஷயம் ; இப்போது நான் இருக்கும் அமெரிக்காவின் சிகாகோவின் மரங்கள் நிறைந்த பகுதிகளில் காக்கைகள் இருக்கின்றன. அவைகள் பார்ப்பதற்கு நம்மூர் அண்டங்காக்கைகளை போல இருக்கின்றன. அவைகள் கத்தும் சத்தமும் நம்மூர் காக்கைகளை போலதான் இருக்கின்றன. ஆனால்அவைகளை கா...கா..கா வென்று கூப்பிட்டால் வீட்டின் கூரைக்கு பறந்து வராது. யாரும் அப்படிக் கூப்பிட்டு இங்கே காக்கைகளுக்கு சோறும் வைப்பதில்லை!
'யாதும் ஊரே; யாவரும் கேளீர்' என்ற இந்த புகழ்பெற்ற வரிகள் மட்டுமே எனக்குத் தெரியும். அந்த அறிவுரை பாடலை முழுமையாக உலகம் போற்றும் 'கணியன் பூங்குன்றனார்' என்ற கட்டுரையில் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றையும் இப்போதுதான் நான் முதன்முறையாக அறிகிறேன்.
'அணு கடிகாரம் என்றால் என்ன?', 'காதலில் இது ஒருவகை', 'வாழ நினைத்தால் வாழலாம்' என்று பல்வித பல்சுவை தகவல்களுடன் பன்முகம் பகுதி படிக்க சுவையாக இருக்கிறது. இந்த பகுதியை தொகுத்து வெளியிட்டிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.